தீபாவளிக்கு மறுநாள் தான் கந்த சஷ்டி விரதம் தொடங்குகிறது

25.10.2021 –

இவ்வாண்டிற்கான கந்த சஷ்டி விரதம் தீபாவளிக்கு மறுநாளான 05.11.2021ஆம் தேதி தான் தொடங்குகிறது என்பதை மலேசிய இந்து சங்கம் தெளிவுப்படுத்துகிறது..

முருகப் பெருமான் சூரனை அழித்த பெருமையைக் கொண்டாடும் விழா தான் கந்த சஷ்டி விழாவாகும். கந்தப் புராணத்தின்படி, பிரதமை திதியில் தான் கந்த சஷ்டி துவங்கும். அமாவாசை திதி கலப்பு இருக்க கூடாது. அவ்வகையில் தீபாவளியான 04.11.2021ஆம் தேதி அமாவாசை திதி வரும் நிலையில், மறுநாள் 05.11.2021ஆம் தேதி தான் பிரதமை திதி வருகிறது.

இதன் அடிப்படையில், பிரதமை திதியான 05.11.2021ஆம் தேதி கந்த சஷ்டி தொடங்கி 09.11.2021ஆம் தேதி சூரசம்ஹாரத்தோடு கந்த சஷ்டி விரதம் முடிவடையும்.

ஆன்மாவைத் துன்புறுத்தும் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களிலிருந்து இறைவன் நம்மைக் காத்து அருள் புரிவதை உணர்த்தும் கந்த சஷ்டி விரதத்தை இந்துக்கள் மேற்கொண்டு திருவருள் பெற வேண்டும். அதேவேளையில், ஆலயங்களில் விழாவை மிதமான அளவில் மட்டுமே கொண்டாட முடியும். ஆலயத்தில் 50 விழுக்காடு பக்தர்கள் மட்டுமே இருக்க அனுமதி உண்டு. ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் கட்டாயம் இரு தடுப்பூசியையும் செலுத்தி கொண்டு 14 நாட்கள் ஆகியிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஊர்வலங்கள் அல்லது திருவிழா நடத்த அனுமதி இல்லை. மேலும், அரசாங்கம் அறிவித்த அனைத்து எஸ்.ஓ.பி-க்களையும் பக்தர்களும் ஆலய நிர்வாகத்தினரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

You may also like...