தீயணைப்பு வீரர் அடிப் மரணம்; துயரமானது; நாட்டின் ஒற்றுமைக்காவும் நல்லிணக்கத்திற்காகவும் பிரார்த்திப்போம்

டிசம்பர் 19- கடந்த 17 டிசம்பர் 2018 இரவு 9.41க்குதேசிய இருதய மருத்துவமனையில் உயிர் நீத்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய மலேசியர்கள் பிரார்த்தனை செய்யுமாறு மலேசிய இந்து சங்கத்தின் தலைவரும் சர்வ சமய மன்றத்தின் தலைவருமான டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் கேட்டுக் கொண்டார். கடந்த நவம்பர் 26ஆம் தேதி, யூஎஸ்.ஜே 25, சுபாங் ஜெயாவில் உள்ள சீபீல்டு ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடந்த கலவரத்தின் போது பணியில் ஈடுப்பட்டிருந்த முகமட் அடிப் கடுமையாக காயமுற்றார்.

உயிர்நீத்த முகமட் அடிப்பின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுபதாபங்கள். அன்னாரின் குடும்பத்தினர் மீளா சோகத்திலிருந்து மீண்டு வர இறைவனைப் பிரார்த்தித்து கொள்வோம். எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு வேண்டிய பலத்தைத் தரட்டும்.

முகமட் அடிப்பின் இழப்பு நமக்கு ஒரு பாடம். நமது அவசர தன்மை ஒரு அப்பாவியின் உயிர் பிரிய காரணமாகி விட்டது. மற்ற விசயங்களைக் காட்டிலும் தேசத்தையும் மனித உயிர்களையும் முதன்மையாக கருதுவோம்.

அடிப்பின் மரணத்திற்கு காரணமானவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதோடு, உண்மை நிலை அறியாமல் வலைதளங்களில் பொய்யான செய்திகள் வெளியிடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். உண்மையான விவரங்களைவெளியிட அதிகாரம் கொண்டவர்களிடம் முழு விவரங்களைத் தெரிந்து கொண்டு பின் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

இப்போது, ஒரு சிலரின் அவசரத்தினால் ஓர் இளைஞனின் வாழ்க்கை அஸ்தமனமாகி விட்டதோடு அன்னாரின் குடும்பத்திற்கும் பெரும் இழப்பையும் மீளா துயரத்தையும் உண்டாக்கி விட்டது. அடிப்பின் மரணம் கொலை சம்பவமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் குற்றச்சாட்டப்பவர்களின் குடும்பமும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நமது உணர்ச்சிகளை அடக்கி இருந்ததோடு சட்டத்தினையும் மதித்து இருந்திருந்தால் இந்த துயரத்தைத் தவிர்த்திருக்கலாம்.

இதற்கிடையில், நாம் நேசிக்கும் நாட்டின் ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிலைத்திருக்க அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நமது ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை பாதுகாக்க நெருக்கடியான தருணங்களில் நாம் அனைவரும்அமைதியாக இருப்பது மிக முக்கியம். ஒரு தவறான நடவடிக்கை கூட நம்மை பிரச்சனைகளுக்கு இட்டுச்செல்லும். ஓம் நமசிவாய.