15.09.2022-
மலேசிய நாட்டின் வரலாற்றில் ஆளுமை நிறைந்த தலைவராக மிளிர்ந்த சங்கரத்னா துன் டாக்டர் ச.சாமிவேலு அவர்களின் சேவையும் புகழும் எக்காலத்திற்கும் நிலைத்திருக்கும் என மலேசிய இந்து சங்கத்தின் நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் தெரிவித்தார்.
மலேசிய இந்து சங்கத்தின் புரவலரும் ம.இ.காவின் முன்னாள் தேசியத் தலைவரும் முன்னாள் பொதுப்பணி அமைச்சருமான துன் டாக்டர் ச.சாமிவேலு அவர்கள் இயற்கை எய்ததை ஒட்டி துயரால் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு மலேசிய இந்து சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
அமரர் துன் சாமிவேலு அவர்கள் தனது பணி காலத்தில் இந்திய மக்களுக்கு ஆற்றிய சேவை அளப்பரியது. அதிலும் இந்து சமயத்திற்கு அவர் ஆற்றிய பணி என்றுமே போற்றத்தக்கது. மலேசிய இந்து சங்கத்தின் வளர்ச்சிக்கும் சங்க நடவடிக்கைகளுக்கும் தூணாக இருந்தவர் துன் சாமிவேலு அவர்கள் எனில் அது மிகையாகாது.
துன் சாமிவேலு அவர்கள் அமைச்சராகவும் கட்சியின் தேசியத் தலைவராகவும் கடும்பணியில் இருந்தப்போதிலும் சங்கத்தின் நிகழ்ச்சிகளுக்கு நிதியுதவி வழங்கியது மட்டுமல்லாமல் நிகழ்ச்சிகளிலும் தவறாது கலந்து கொள்வார். அவரின் ஒத்துழைப்பின் பேரில் இந்து சங்கத்தின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான திருமுறை ஓதும் விழா மேலும் மேன்மை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்து சங்கத்தின் நீண்ட கால முயற்சியான நாட்டில் உள்ள மொத்த ஆலயங்களின் கணக்கெடுப்பு துன் சாமிவேலு காலத்தில் தான் செவ்வனே மேற்கொள்ளப்பட்டது. ஆலயக் கணக்கெடுப்பை மேற்கொள்ள இந்து சங்கத்திற்கு துன் சாமிவேலு அவர்கள் அங்கீகாரம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. துன் சாமிவேலுவின் சேவையைப் போற்றும் வகையில் மலேசிய இந்து சங்கத்தின் உயரிய விருதான ‘சங்கரத்னா விருது’ வழங்கி சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் உள்ள இந்தியர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அவர்களுக்கு மேற்கல்வி தடையாக இருந்து விடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்திய துன் அவர்கள் நிறுவிய டேப் கல்லூரி மற்றும் ஏய்ம்ட்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவை என்றுமே துன் சாமிவேலுவின் புகழைப் பாடும்.
தான் வாழ்ந்த காலத்தில் இந்திய மக்களுக்கு மட்டுமல்ல மத, இனம் பாராமல் அனைவரையும் அரவணைத்து செல்லும் குணம் கொண்ட துன் சாமிவேலு அவர்களின் மறைவு இந்திய சமுதாயத்திற்கு மிக பெரும் இழப்பாகும். இவ்வேளையில், மலேசிய இந்து சங்கம் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஓம் நமசிவாய..