துருக்கி – சிரிய மக்களின் மீட்சிக்காக இந்து வழிபாட்டு தலங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பிரார்த்தனை

09 பிப்ரவரி 2023

கடந்த திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியா நாடுகளில் பல்லாயிரக் கணக்கான மக்கள்  உயிர், உடல், உடைமைச் சேதத்திற்கு ஆளாகி பெருந்துயரை எதிர்கொண்டு வருகின்றனர். அவ்விரு நாடுகளைச் சேர்ந்த மக்களின் மீட்சிக்காக மலேசியாவில் உள்ள இந்து வழிபாட்டு தலங்களில் பிப்ரவரி 10, வெள்ளிக்கிழமை மாலை பூசைக்குப் பின் சிறப்பு வழிபாடு நடத்தும்படி மலேசிய இந்து சங்க மத்தியப் பேரவை சார்பில் கேட்டுக் கொள்வதாக அதன் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ சங்கபூசன் தங்க கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிப்ரவரி 06 விடியற்காலை 4:00 மணியளவில் துருக்கியின் காசியண்டெப் நகரில் 7.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடுமையான இந்த நில அதிர்வைத் தொடர்ந்து அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டதால் ஏராளமான கட்டங்கள் சரிந்து, அவற்றின் இடிபாடுகளில் சிக்கி பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்களின் இன்னுயிரைத் துறந்தனர். இதன் விளைவால் அண்டை நாடான சிரியாவிலும் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அங்கு உடனே மேற்கொள்ள வேண்டிய மீட்புப் பணிக்காக மலேசிய அரசு துருப்புகளை அனுப்பிவைத்ததுடன் மலேசியாவின் சார்பில் ரிம. 2 மில்லியன் நிதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மலேசியாவின் ஒற்றுமை அரசாங்கத்திற்கும் பிரதமருக்கும் நாம் அனைவரும் பாராட்டும் நன்றியும் தெரிவிக்க வேண்டும்.

அதேவேளை, குடும்ப உறுப்பினர்கள், வசிப்பிடம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து மீளாத் துயருக்கு ஆட்பட்டுள்ள அந்த மக்களின் மீட்சிக்காக, மலேசியவாழ் இந்துப் பெருமக்கள் அனைவரும் தனிப்பட்ட முறையில் பிரார்த்திக்க வேண்டும் என்றும் குறிப்பாக, ஆலயங்களில் வெள்ளிக்கிழமை மாலையில் வழக்கமான வழிபாட்டுக்குப் பின் சிறப்புப் பிரர்த்தனை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் துயரில் பங்கெடுக்க வேண்டும் என்றும் மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

You may also like...