தேசிய கல்வி ஆலோசனை மன்றம்: இந்தியர் பிரதிநிதித்துவம் இல்லை

20 ஜனவரி 2023-

தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் மலேசிய இந்திய சமுதாயத்தின் சார்பில் ஒருவரும் நியமிக்கப்படாதது குறித்து மலேசிய இந்து சங்கம் ஆதங்கமும் வேதனையும் கொள்கிறது என்று அதன் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ சங்கபூசன் தங்க. கணேசன் தெரிவித்துள்ளார்.

மாணவர் எண்ணிக்கைக் குறைவால் அதிகமான தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக் குறிக்கு உள்ளாகியுள்ளது உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைகளை நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் சந்திந்து வருகின்றன.

இப்படிப்பட்ட பல்வேறு சிக்கல்கள் குறித்து, அரசாங்கத்தின் கவனத்திற்கு, குறிப்பாக கல்வி அமைச்சின் பார்வைக்கு நேரடியாக எடுத்துச் செல்லும் வகையில் கல்வித் துறையில் ஓர் இந்தியர் துணை அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்ற மலேசிய இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ர்பு பொய்த்துவிட்ட நிலையில், கல்வி அமைச்சின் சார்பில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் ஓர் இந்தியர் கூட இடம்பெறாதது குறித்து மலேசிய இந்து சங்க தேசியப் பேரவை தன் வருத்தத்தைப் பதிவுசெய்கிறது.

எண்மர் கொண்ட புதிய குழுவை கல்வி அமைச்சகம் நேற்றைய முன்தினம் ஜனவரி 19-ஆம் நாள், அறிவித்தது. பௌசான் நோர்டின் தலைமையிலான இக்குழுவில் என்.எஸ். மகேந்திர சிங் உள்ளிட்ட கல்வியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது மகிழ்ச்ச்சி அளிக்கக்கூடியதுதான் என்றாலும் 527 தமிழ்ப் பள்ளிகள், இவற்றில் பயிலும் சுமார் ஒரு இலட்சம் மாணவர்கள், ஏறக்குறைய 10 ஆயிரம் தமிழாசியர்களும் உள்ளடங்கியதுதான் மலேசியக் கல்வித் துறை.

இந்த நிலையில், ஒரு தமிழர் கூட இந்தக் குழுவில் நியமிக்கப்படாதது குறித்தும் இந்திய சமுதாயத்தில் அந்நியப்பட்டு தனித்தியங்கும் சீக்கியர் நியமிக்கப்பட்டுள்ளது குறித்தும் மலேசிய இந்திய சமுதாயம், குறிப்பாக இந்துப் பெருமக்கள் பெரும் வருத்தம் கொண்டுள்ளதாக இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்க. கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You may also like...