தேசிய மொழி பாடத்தில் அரபு சித்திர மொழியை இணைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது – மலேசிய இந்து சங்கம் கண்டனம்!

ஆகஸ்டு 5 – அடுத்தாண்டு முதல் தாய்மொழிப் பள்ளிகளில் 4ஆம் வகுப்பு முதல் தேசிய மொழி பாடத்தில் அரபு சித்திர மொழியை (Calligraphy) இணைக்கும் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என மலேசிய இந்து சங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தேசிய மொழியான மலாய் மொழியை போதனை மொழியாக அமல்படுத்தியதன் வழி நாட்டில் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கம் நிறைவேறி வரும் நிலையில், இப்போது தாய்மொழி பள்ளிகளில் குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளில் தேசிய மொழி பாடத்திட்டத்தில் ஓர் அங்கமாக அரபு சித்திர மொழியை கட்டாயப் பாடமாக இணைக்க வேண்டியதன் அவசியம் என்ன என மலேசிய இந்து சங்கம் கேள்வி எழுப்புகிறது.

அரபு சித்திர மொழி, அரேபிய இலக்கியத்தை பயில்வதற்கான மொழியாகும். அடிப்படை இஸ்லாத்தை கற்றுக் கொள்ள உதவும் மொழியாகும். இதனை தாய்மொழி பள்ளிகளில் அதுவும் தேசிய மொழி பாட நேரத்திலே கட்டாய பாடமாக இணைப்பதற்கு காரணம் என்ன? இதில் மறைமுக நோக்கம் ஏதும் மறைந்துள்ளதா என மலேசிய இந்துக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், இஸ்லாமிய மயமாக்கும் திட்டத்திற்கு மலாய் மொழி எழுத்தை இப்போது பயன்படுத்தப்படும் ரூமி எழுத்திலிருந்து ஜாவி எழுத்திற்கு மாற்றுவது நல்ல பலன் தரும் என்பதால் ஜாவி எழுத்தைத் திணிக்கும் முயற்சியாக இது அமைக்கிறதா என்ற கேள்வியும் இந்துக்களிடையே எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசின் முயற்சிகளுக்கு தடை போட வேண்டும் என்ற எண்ணம் நமக்கு கிடையாது. அரபு சித்திர மொழியை கலைக்கல்வி பாடத்திட்டத்தில், அதுவும் விருப்பப் பாடமாக இணைத்திருந்தால் மலேசிய இந்துக்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டார்கள். ஆனால், கட்டாய பாடமாக இதனை இணைப்பதற்கு பின்னால் ஏதோ மறைமுக நோக்கம் உள்ளது என்ற சந்தேகம் எழும்புகிறது. எனவே, தேசிய மொழி பாடத்தில் அரபு சித்திர மொழியை (Calligraphy) கட்டாய பாடமாக இணைக்கும் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

You may also like...