தைப்பூசத்தன்று பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

26.01.2021-

எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச திருநாள் அன்று ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் யாகங்களும் நடத்தலாம். இதில் குருக்கள், ஆலய நிர்வாகத்தினர் உட்பட 5 பேர் மட்டும் கலந்து கொள்ளலாம். இவர்கள் நிர்ணயிக்கப்பட்ட செயல்முறை தர விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதேவேளையில், தைப்பூசத்தன்று ஆலயம் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்பதை மலேசிய இந்து சங்கம் மீண்டும் நினைவுறுத்திக் கொள்கிறது.

இவ்வருட தைப்பூசம் கடந்த காலங்களைப் போல் அல்லாமல் முற்றிலும் மாறுப்பட்ட நிலையில் பக்தர்கள் இல்லாமலே ஆலயத்தில் சிறப்பு அபிஷேகங்களும் யாகங்களும் பூஜைகளும் நடைபெறவிருக்கின்றன. பக்தர்கள் ஆலயம் வர முடியாவிட்டாலும் எம்பெருமான் முருகனைக் கண்டு மனமுருகி வேண்ட ஆலய நிர்வாகத்தினர் சிறப்பு பூஜைகளை இணையம் வழி ஒளியேற்றலாம்.

அதேவேளையில், பக்த மெய்யன்பர்கள் தங்கள் இல்லத்திலேயே விரதம் இருந்து முருக பெருமானுக்கான கந்தர் சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் ஆகியவற்றை ஓதி சிறப்பு வழிப்பாடுகளை மேற்கொள்ளலாம். இல்லத்தில் தைப்பூச வழிப்பாடு மேற்கொள்வதற்கான வழிமுறைகளை மலேசிய இந்து சங்கம் தனது அகப்பக்கத்தில் காணொளியாக வெளியிட்டுள்ளது. அதனைப் பின்பற்றி பக்தர்கள் பிரார்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

கோவிட்-19 தாக்கத்திலிருந்து நாட்டு மக்கள் விரைந்து குணம் பெறவும் நாடு சுபிட்சம் பெறவும் தைப்பூசத்தன்று எல்லாம் வல்ல முருக பெருமானை மனதார வேண்டி கொள்வோம் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.