2021 தைப்பூசம்

10.10.2020-

2021ஆம் ஆண்டுக்கான தைப்பூசத்தை நடத்த வேண்டாம் என மலேசிய இந்து சங்கம் ஒருபோதும் கூறவில்லை. மாறாக, மிதமான அளவில் கொண்டாடுவது நல்லது என்று தான் இந்து சங்கம் இந்துக்களுக்கு ஆலோசனை வழங்கியது என அதன் தேசியத் தலைவர் ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் தெரிவித்தார்.

தற்போதைய காலக்கட்டத்தில் கோவிட்-19 நச்சில் பெருந்தொற்று நாட்டில் மூன்றாவது அலையாக உருவெடுத்து, அதி வேகமாக பரவி வரும் நிலையில், இது எப்போது முடிவுக்கு வரும் என தெரியவில்லை. இந்நிலையில், தைப்பூசத்திற்கு இன்னும் மூன்று மாத காலமே இருக்கும் பட்சத்தில் காவடி செய்தல், தண்ணீர் / அன்னதான பந்தல் ஆகியவற்றுக்கான ஏற்பாடும் முன்பணம் செலுத்துதல் போன்ற விசயங்களும் விரைவில் தொடங்கும். ஆனால், தைப்பூச விழா காலத்தில் கோவிட்-19 பாதிப்பு இருந்து, அரசாங்கம் தடை ஏதும் விதித்தால் அதனால் பெரும் பாதிப்பை எதிர்நோக்க போவது நம் இந்துக்கள் தான்.

இதனைக் கருத்தில் கொண்டே, ஏற்பாடுகளும் விழா கொண்டாட்டமும் மிதமான அளவில் இருப்பது நல்லது என மலேசிய இந்து சங்கம் ஆலோசனை வழங்கியது. இதில் என்ன தவறு உள்ளது?

மேலும், மலேசிய இந்து சங்கத்தின் நேரடி பார்வையின் கீழ் 3 ஆலயங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. அவை, தாப்பாவில் அமைந்துள்ள ஜீவ சமாதியான சத்குரு ஶ்ரீ ஜெகநாதர் சுவாமி ஆத்ம நிலையம், பத்துகேவ்ஸ், சுங்கை துவாவில் அமைந்துள்ள ஆறுமுக விநாயகர் ஆலயம் மற்றும் கோல திரங்கானுவில் உள்ள ஶ்ரீ காசி விஸ்வநாதர் விசாலாட்சி ஆலயம் ஆகியவையாகும். இந்து சங்கத்தின் கீழ் இந்த ஆலயங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன.

அதுமட்டுமல்ல, நாட்டில் ஏறக்குறைய 2,300 ஆலயங்கள் இந்து சங்கத்திடம் பதிவு பெற்றுள்ள நிலையில், ஆலயங்களுக்கு அரணாகவும் தேவையான ஆலோசனைகளை வழங்கும் அங்கீகாரமும் இந்து சங்கம் கொண்டுள்ளது என்பதை சில தரப்பினர் உணர்ந்து கொள்ள வேண்டும். எத்தனை அமைப்புகள் உருவாக்கப்பட்டாலும் அது குறித்து இந்து சங்கம் ஒருபோதும் வருத்தம் கொள்ளாது.

மலேசிய இந்து சங்கத்தை ‘செண்டிரியான் பெர்ஹாட்’ என்று கூறுவதை சில தரப்பினர் நிறுத்தி கொள்வது நல்லது. பேசும் முன் விவரம் அறிந்து பேசுவது அவசியம். ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் எப்படி சட்டத்துறைக்கு கீழ் பதிவு பெற்றுள்ளதோ அதுபோலவே மலேசிய இந்து சங்கம் நிறுவன சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற அமைப்பாகும். இதனாலேயே, கடந்த 56 ஆண்டுகளாக மலேசிய இந்து சங்கத்தை யாராலும் அசைக்க முடியவில்லை. அதோடு, இந்து சங்கம் பணம் சம்பாதிக்க அமைக்கப்பட்ட இயக்கமல்ல என்பதை மீண்டும் மீண்டும் நினைவுறுத்த விரும்புகிறோம்.

அதோடு, குருக்கள்களுக்கும் இசை கலைஞர்களுக்கும் குடிநுழைவு துறைக்கு சிபாரிசு கடிதம் வழங்க பணம் கேட்கப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாம் குடிநுழைவு துறைக்கு மட்டுமல்ல, தேசிய பதிவிலாகாவிற்கு பெயர் மாற்றம் செய்யவும், ஆலயங்களுக்கான வரி விலக்கு அளிக்கவும் சிபாரிசு கடிதம் வழங்கி வருகிறோம். அதோடு, ஒற்றுமைத்துறை அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் இதர அமைச்சுகளுடன் அணுக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டு சமயம் சார்ந்த ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம்.

மலேசிய இந்து சங்கம், நமது சமய விழாக்களைக் கொண்டாட வேண்டாம் என கூறியது கிடையாது. ஆனால், கால சூழ்நிலைக் கருதி, நாட்டிற்கும் உயிருக்கும் ஆபத்து என்றால், எந்த விழாவாக இருந்தாலும் மிதமாகவோ அல்லது அவசியம் எனில் நிறுத்துமாறும் கூற இந்து சங்கம் தயங்காது என்பதைக் கூறி கொள்கிறோம்.

மலேசிய இந்து சங்கத்தின் ஒரே நோக்கம், ஒரே சிந்தனை ‘தொண்டு’ மட்டுமே. இதனை முன்னிறுத்தி இந்து சங்கம் தனது சேவையைத் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றும் இறைச் சேவையில்,

ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் PMW.,JMW.,AMK.,BKM.,PJK

தேசியத் தலைவர்,மலேசிய இந்து சங்கம்

You may also like...