தைப்பூச தண்ணீர்ப் பந்தல்: திரைப்பட பாடல்-பொழுதுபோக்கு அம்சங்களைத் தவிர்த்திடுங்கள்

25 ஜனவரி 2023-

மலேசிய வாழ் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கம். 2023 தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாட இருக்கும் அனைத்து இந்து ஆலய நிர்வாகத்தினரும் பக்த அன்பர்களும் தைப்பூச நன்னாளில் புனிதத்தையும் தனித்துவத்தையும் நிலைநாட்ட வேண்டும் என்று மலேசிய இந்து சங்க மத்தியச் செயலவை சார்பில் அடியேன் கேட்டுக் கொள்கிறேன்.

தைப்பூசத் திருவிழா, அடிப்படையில் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்குரிய சமய நிகழ்வாகும். அவ்வாறு, நேர்த்திக் கடனை நிறைவேற்ற காவடி-பால் குடம் ஏந்தும் பக்தர்கள், சைவ உணவுடன் கட்டுப்பாடாகவும் இருந்து விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். விரதம் இருக்கும் காலக்கட்டத்தில், பண்பாட்டுக் குறைவான பொழுதுபோக்கு இசையைக் கேட்பது, நடனம் புரிவது போன்ற நடவடிக்கைகளை அடியோடு தவிர்க்க வேண்டும்.

ஆனால், அண்மைக் காலமாக ஒருசில ஆலயங்களின் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் தைப்பூச விழா தொடர்பான தண்ணீர்ப் பந்தல்களில் திரைப்பட பாடல்களை ஒலிபரப்புவதையும் இளம் பக்தர்கள் உல்லாசத் தன்மையுடன் நடனமாடுவதையும் பரவலாகக் காணமுடிகிறது. இதனால், மற்ற பக்தர்களுக்கு சங்கடம் ஏற்படுவதுடன், இந்து சமயம் மற்றும் நம் வழிபாட்டு தலங்களின் தோற்றத்திற்கு பாதிப்பும் உண்டாகிறது.

எனவே, நம் பாரம்பரிய சமயத்திற்கும் வழிபாட்டு முறைக்கும் பங்கம் ஏற்படுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட ஆலயங்கள் அடியோடு தவிர்க்க வேண்டிய முக்கியமான காலக்கட்டம் இது என்பதை மலேசிய இந்து சங்கம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. இளம் பக்தர்கள் திருமுருக வணக்கப் பாடல்களைப் பாடவும் பக்தி நெறியோடு அவற்றுக்கு நடனமாடவும் ஆலய நிர்வாகங்கள் வழிகாட்ட வேண்டும்.

தைப்பூசத் திருவிழா தொடர்பில் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து ஆலயங்களும் அவசியம் பின்பற்ற வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்வதுடன் இந்த நாட்டில் சனாதன தருமம் செழிக்க துணைநல்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி!

You may also like...