24.12.2020 –
பத்திரிகைச் செய்தியைத் தெளிவாக புரிந்து கொண்டு பேசுவது தான் நல்ல தலைவருக்குச் சிறப்பு. உள்ளடக்கம் என்னவென்று புரியாமல் மலேசிய இந்து சங்கம் மீது பழி போடுவதை நிறுத்தி கொள்வது நல்லது. இந்துக்களுக்கும் இந்து சமயத்திற்கும் அரணாக இருக்கும் மலேசிய இந்து சங்கம், ஒருபோதும் தைப்பூச விழாவை ரத்து செய்யும் முயற்சியில் இறங்கியதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தைப்பூச விழா செயல்பாட்டு தர விதிமுறை (எஸ்.ஓ.பி) குறித்து பத்திரிகை ஒன்று கேட்ட கேள்விக்கு தான் மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான், ஜனவரி முதல் வாரத்தில் எஸ்.ஓ.பி குறித்த விவரத்தை அரசாங்கம் வெளியிட வாய்ப்பு உள்ளது என பதிலளித்துள்ளாரே தவிர எஸ்.ஓ.பியை இந்து சங்கம் தான் அறிவிக்கும் என கூறவில்லை.
தைப்பூச விழாவிற்கான ஒற்றுமைத்துறை அமைச்சு உடனான எஸ்.ஓ.பி கலந்துரையாடலில் மலேசிய இந்து சங்கமும் பங்கேற்றுள்ள நிலையில், அரசாங்கம் வெளியிடும் விதிமுறைகளைப் பின்பற்றியே விழா கொண்டாடப்பட வேண்டும் என இந்து சங்கம் கூறியதில் என்ன தவறு? பத்திரிகை செய்தி தெளிவாக இருக்கும்போது உள்ளடக்கம் புரியாமல் வீண்பழி சுமத்துவது எதற்காக? இந்து சங்கத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்க கூடிய முயற்சியை தேவஸ்தான தலைவர் நிறுத்தி கொள்ள வேண்டும்.
பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி அரசாங்கம் மேற்கொண்டுள்ள எஸ்.ஓ.பி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு, மக்களின் சுகாதாரத்திற்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத வழிமுறைகளை ஆலோசனையாக வழங்கிய இந்து சங்கத்திற்கு கருத்து தெரிவிக்க முழு உரிமை உண்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மலேசிய இந்து சங்கம், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்துக்களின் பிரதிநிதி என்பதை இந்துக்கள் அறிவர். இந்து சங்கத்தின் குரலும் நடவடிக்கையும் என்றுமே பொதுமக்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து தான் இருக்குமே தவிர சுய ஆதாயத்தைப் பொருத்து இருக்காது என்பதை மீண்டும் இங்கு தெளிவுப்படுத்தி கொள்கிறோம்.