தைப்பூச விழா பிப்ரவரி 5ஆம் தேதி தான் கொண்டாடப்படும்

8 டிசம்பர் 2022-

அடுத்த ஆண்டிற்கான தைப்பூச பெருவிழா பிப்ரவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தான் கொண்டாடப்படும் என்பதை மலேசிய இந்து சங்கம் தெளிவுப்படுத்த விரும்புகிறது.

அண்மையக் காலமாக 2023ஆம் ஆண்டுக்கான தைப்பூச தேதி பிப்ரவரி நான்கா அல்லது ஐந்தா என்ற சந்தேகம் பக்தர்களிடையே பரவலாக எழுந்துள்ளது. இதற்கு காரணம் தை மாத பூசம் நட்சத்திரம் பிப்ரவரி 4ஆம் தேதி பிறப்பதனால் இந்த சந்தேகம் எழுந்துள்ளது.

மலேசிய இந்து சங்கத்தின் விளக்கம் இதோ. பூசம் நட்சத்திரம் பிப்ரவரி 4ஆம் தேதி சனிக்கிழமை மலேசிய நேரப்படி மதியம் 1.13 மணிக்குப் பிறக்கிறது. ஆயினும், தைப்பூச விழா என்பது காலையில் முருகப்பெருமானின் வேலுக்கான தீர்த்த உற்சவம் நடைபெற்ற பிறகே தொடங்கும் என்பது நடைமுறை. ஆகையால், தீர்த்த உற்சவம் பிப்ரவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் தான் நடைபெறும். எனவே, தைப்பூச விழாவானது பிப்ரவரி 5ஆம் தேதி தான் கொண்டாடப்படும் என்பதை மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

எனவே, பொதுமக்கள் குழப்பமடையாமல் பிப்ரவரி 5ஆம் தேதி முருகப்பெருமானின் புகழைப் பாடி நேர்த்தி கடன்களை நிறைவேற்றி எல்லாம் வல்ல இறைவனின் அருளைப் பெறுமாறு மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.