05.01.2023-
இயற்கைக்கும் நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் திருநாள் தான் பொங்கல் பண்டிகை. பயிர்களின் வளர்ச்சிக்கு மழையைத் தந்து வளம் தரும் சூரிய பகவானுக்கு உழைப்பின் முதல் அறுவடையை பொங்கல் வைத்து படைத்து நன்றி கூறி வழிபட்டு வருவது நமது தமிழர் மரபாகும்.
சிறப்புமிகு தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும் தைப்பொங்கலை இவ்வருடம் ஜனவரி மாதம் 15ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை கொண்டாடவிருக்கிறோம். இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லும் பண்டிகையாக கொண்டாடப்படும் தைப்பொங்கலை வைக்க உகந்த நேரம் குறித்து மலேசிய இந்து சங்கம் விளக்கம் அளிக்கிறது.
தைப்பொங்கல் அன்று, காலை 7.26 மணி முதல் 11.26 மணி வரை பொங்கல் வைக்க நல்ல நேரமாகும். மாலையில் வைக்க விரும்புவர்கள் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை அல்லது மாலை 7 மணிக்கு மேல் வைக்கலாம். இருப்பினும் காலை வேளையில் பொங்கல் வைப்பதே உத்தமம்.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றான் மகாகவி பாரதி. எனவே, இயற்கைக்கு நன்றி கூறும் அதே வேளையில், நம் உறவினர்களோடும் சுற்றத்தார்களுடனும் மகிழ்ச்சியாகவும் சமயம், கலாச்சார சார்ந்த நல்சிந்தனையோடும் கொண்டாடுவோம்.
தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பது சான்றோர் வாக்கு. பிறக்கும் தை மாதம் மக்களுக்கு சிறந்தவற்றை வழங்கும் என்ற நம்பிக்கையோடு மலேசிய இந்து சங்கத்தின் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
என்றும் இறைச் சேவையில்,
ஶ்ரீகாசி சங்கபூசன் தங்க. கணேசன் AMN.,ASA
தேசியத் தலைவர்