தை அமாவாசையின் சிறப்புகள்
இன்று (04.02.2019) தை அமாவாசை. அதோடு எப்போதாவது ஒரு முறை அபூர்வமாக வாய்க்கும், பல புண்ணிய பலன்களை அளிக்கும் ஶ்ரீ மகோதய புண்ணிய காலம் சேர்ந்து வருகிறது. அமாவாசை அன்று முன்னோரை வழிபடுவது மிகவும் விசேஷம். அதோடு மகோதய புண்ணியகாலமும் சேர்ந்து வருவதால் மிகமிகக் கூடுதல் சிறப்பு வாய்ந்தது.
அமாவாசை என்பது முன்னோர்கள் வழிபாட்டிற்கான நாள் என்பதை நாம் அறிவோம். அதிலும் தை அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. சூரியனின் வடக்கு திசை நகர்வான உத்ராயன புண்ணிய காலத்தில் வருவதால் கூடுதல் பலன்கள் தருவதாகக் கருதப்படுகிறது.
நம் முன்னோர்கள் ஓர் ஆண்டில் வரும் புண்ணியகாலங்களை வகுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பும், அமாவாசையும் புண்ணியகாலங்கள் என்கின்றன சாஸ்திரங்கள். சில மாதப் பிறப்புகள் பண்டிகைகளாகவும் கொண்டாடப்படும். இந்தப் புண்ணியகாலங்கள் அனைத்தும் முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த நாள்கள்தான். குறிப்பாக ஆடி, புரட்டாசி, தை ஆகிய மூன்று மாதங்களில் வரும் அமாவாசைகளில் சமுத்திரத்தில் நீராடி நீர்க்கடன் செலுத்துவது சிறப்பு.
நம் மரபில் முன்னோர் வழிபாடு சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளது. புராண இதிகாசங்களில் அதன் சிறப்பு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வல்லாளன் என்னும் பிள்ளையில்லா பக்தனுக்கு திருவண்ணாமலையாரும், லட்சுமி நாராயணர் என்ற பக்தனுக்கு குடந்தை சாரங்கபாணிப் பெருமாளும் ஆண்டுதோறும் திதி கொடுப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. முன்னோர் வழிபாட்டின் மேன்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இறைவனே இத்தகைய லீலைகளைப் புரிந்திருக்கிறார்.
பொதுவாக அமாவாசை அன்று தர்பணம் செய்வது வழக்கம். எல்லா அமாவாசையிலும் அதை நிறைவேற்றத் தவறியவர்கள் அல்லது வழிபாட்டில் ஈடுபடமுடியாதவர்கள், நாளை அதைச் செய்து பலன் பெறலாம். அமாவாசை ஞாயிறன்று வந்து அன்று திருவோணம், அவிட்டம், அசுவினி, திருவாதிரை, ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களோடு சேர்ந்துவந்தால் அதை ‘வ்யதீபாதம் புண்ணியகாலம்’ என்பார்கள். இந்த நாள் நூறு சூரியகிரகணங்களின் போது முன்னோரை வழிபட்ட பலன் கொடுக்கும். அதுவே குறிப்பாக தை அல்லது மாசிமாதங்களில் நிகழ்ந்தால் இதை ‘அர்த்யோதய புண்ணியகாலம்’ என்றும் திங்கள் அன்று நிகழ்ந்தால் ‘மகோதய புண்ணியகாலம்’என்றும் குறிப்பிடுவர். இந்த நாள்களில் நதிகளில் அல்லது சமுத்திரத்தில் நீராடி முன்னோர் வழிபாடும் இறைவழிபாடும் செய்ய, கோடி சூர்யகிரகணத்தன்று வழிபாடு செய்த பலன்கள் கிட்டும் என்கின்றன சாஸ்திரங்கள்.
அப்படி ஒரு மகோன்னதமான புண்ணியகாலம் இன்று நமக்கு வாய்த்திருக்கிறது. நீராடி கரைகளிலேயே அமர்ந்து தர்பணம் முதலிய நீர்க்கடன்களைச் செய்துப் பின் முன்னோர்களை வழிபடவேண்டும். வசதி உள்ளவர்கள் வறியவர்களுக்கு உணவு, உடை தானங்கள் செய்யலாம். அவ்வாறு தானம் செய்வது செய்பவரின் முன்னோரையே சென்று சேரும் என்று நம்பப்படுகிறது. எனவே இன்று அபூர்வமாக வாய்த்திருக்கும் மகோதய புண்ணியகாலத்தில் வழிபட்டு முன்னோரின் அருளைப் பெறலாம்.