தொடரும் ஒருதலைப்பட்சமான மதமாற்ற நடவடிக்கைகள்

16 பிப்ரவரி 2022-

நாட்டில் தொடர்ந்து பெற்றோர் இருவரில் ஒருவருக்கு தெரியாமல் பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவது கண்டு மலேசிய இந்து சங்கம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

திருமதி இந்திராகாந்தி முதல் இன்று லோ சியூ ஹோங் வரை பெற்றோரில் தாய்க்கோ தந்தைக்கோ தெரியாமல் ஒரு தரப்பினர் பிள்ளைகளை மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருவது வருத்தம் அளிக்கிறது. சர்ச்சைக்குரிய இவ்விவகாரங்கள் நீதிமன்றம் செல்லும் வரை யாருக்கும் தெரியாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அதிலும், நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு வழங்கிய பிறகும் அதிகாரிகள் பிள்ளைகளை ஒப்படைக்கவோ அல்லது பார்க்கவோ தடையாக இருப்பது கண்டனத்திற்குரியது.

அதேவேளையில், பராமரிப்பு இல்லத்தில் வளர்க்கப்படும் பிள்ளைகளை பெற்றோர்களுக்கு தெரியாமல் சமயப் பள்ளிகளில் இணைத்து போதிப்பதும் ஆங்காங்கே நடைபெறுவதாக புகார்கள் வந்துள்ளன. அதோடு, பராமரிப்பு இல்லத்தில், பிள்ளைகளின் சமயத்தை விடுத்து மற்ற சமயப் போதனைகளைப் போதிப்பதும் அதிகரித்து வருகிறது. இது சட்டத்திற்கு புறம்பானதாகும். இதனை மலேசிய இந்து சங்கம் கடுமையாக கருதுகிறது.

இவ்வேளையில், லோ சியூ ஹோங் போன்ற மதமாற்ற விவகாரங்களில் மதமாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் மலேசிய இந்து சங்கம் தனது முழுமையான ஆதரவை வழங்கும் என தெரிவித்துக் கொள்கிறது. 

You may also like...