18.10.2023-
பேராக், மாத்தாங் நாயகி அம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சிலை, ஆடவன் ஒருவனால் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து மலேசிய இந்து சங்கம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஆடவன் ஒருவன் இன்று காலை மாத்தாங் நாயகி அம்மன் ஆலயத்தின் முன் வாசலில் வைக்கப்பட்டிருந்த ஆளுயர சிலையின் பாகங்களைச் சேதப்படுத்திய சம்பவம் நாட்டில் உள்ள இந்துகளை வேதனைப்படுத்தியுள்ளது.
இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதிலும், தற்போது நவராத்தி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இச்சம்பவம் பெரும் அதிருப்தியும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு முறையும் இம்மாதிரியான சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் அதில் சம்பந்தப்பட்டவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறப்பட்டு இவ்விவகாரம் கைவிடப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பார்த்து இந்து கடவுள் சிலைகளைச் சேதப்படுத்துவது வழக்கமானதாகி விட்டதா என்ற கேள்வியும் இந்துக்களுக்கிடையே எழுகிறது.
அதுபோல் இல்லாமல், இதுப்போன்ற வன்செயல்கள் இனிமேலும் நடக்காமல் இருக்க வேண்டுமெனில், போலீஸ் துறை அதிக கவனம் செலுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். இல்லையேல், இது தொடர்கதையாகும் என்பதைப் போலீஸ் துறை கருத்தில் கொள்ள வேண்டும் என இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
என்றும் இறைச் சேவையில்,
ஶ்ரீகாசி சங்கபூசன் தங்க. கணேசன் AMN.,ASA
தேசியத் தலைவர்,
மலேசிய இந்து சங்கம்