தொழில்முனைவோர் துணை அமைச்சருடன் சந்திப்பு; இந்து சங்கத்திற்கு புது நம்பிக்கை அளிக்கிறது

07 ஜனவரி 2023-

புத்தாண்டு மலர்ந்துள்ள நிலையில், புதிய அரசின் தொழில்முனைவோர்-கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியை மலேசிய இந்து சங்க மத்தியப் பேரவைப் பொறுப்பாளர்கள் அண்மையில் சந்தித்ததும் இந்து சங்கத்தின் பல்வேறு கோரிக்கைகளுக்கு துணை அமைச்சர் ஆதரவு அளித்ததும் புது நம்பிக்கை அளிப்பதாக சங்கத்தின் தேசியத் தலைவர் ஶ்ரீகாசி சங்கபூசன் தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.

மலேசிய இந்து வழிபாட்டு தலங்களில் நிலவும் குருக்கள் பற்றாக்குறை சிக்கலைக் களையும் பொருட்டு, இந்து சங்கத்தின் தாப்பா அருள்மிகு ஜெகநாதர் ஆத்ம நிலையத்தில் அர்ச்சகர் பயிற்சி நிலையத்தை குருகுலவாச முறையில் உருவாக்க அமைச்சர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் தவறான பாதையை நாடுவதைத் தவிர்ப்பதற்காக, தொடக்கப் பள்ளிகளிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் இந்து மாணவர்களுக்காக சமய நன்னெறி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற இந்து சங்க பரிந்துரைக்கும் சரஸ்வதி கந்தசாமி ஆதரவு தெரிவித்தார்.

அதைப்போல உயர்க்கல்வி நிலையங்களில் இந்து மாணவர்கள் மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கும் அவர்  செவிசாய்த்தார்.

தண்டனை காலம் முடிந்து சிறைகளில் இருந்து வெளியேறுபவர்களை சமுதாயத்துடன் சேர்ந்து குடும்பத்தினரும் புறக்கணிப்பதால், மன பாதிப்பிறகு ஆளாகும் சம்பந்தப்பட்டவர்கள், கல்வித் தகுதியும் கைவினைத் திறனும் இருந்தபோதும் மீண்டும் தவறான பாதையை நாடும் அவலம் தொடர்வதால், இப்படிப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க ஒரு புனர்வாழ்வு மையம் தேவையென்றும் இதன் தொடர்பில் இந்து சங்கம் உதவ முன்வருவதாகவும் முன்வைத்த பிரிசீலனையை பாராட்டிய துணை அமைச்சர் இது குறித்து தொழில் முனைவோர் துறை அமைச்சருடன் ஆலோசித்தபிறகு இப்படிப்பட்டவர்களுக்குரிய தொழில் வாய்ப்பு புனரமைப்பு குறித்து முடிவெடுக்கலாம் என்று ஆதரவு தெரிவித்தார்.

இதைப்போல இன்னும் ஏராளமான சமய சமூக கோரிக்கைகளுக்கும்  துணை  அமைச்சர் ஆதரவளித்தது, மலேசிய இந்து சங்க தேசியப் பேரவைக்கு எதிர்கால நம்பிக்கையை அளித்தது என்று சிவநெறிச் செல்வர் தங்க. கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

You may also like...