ஆலயங்களில் செயல்பாட்டு தர விதிமுறைகளைக் கடுமையாக பின்பற்றுங்கள்: நவராத்திரி விழாவை மிதமாக கொண்டாடுங்கள் – மலேசிய இந்து சங்கம் அறிவுறுத்து!
அக்டோபர் 5, 2020 –
நாட்டில் கோவிட்-19 நச்சில் பெருந்தொற்று பாதிப்பு எதிர்பாரா வகையில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் செயல்பாட்டு தர விதிமுறைகளை (எஸ்.ஓ.பி) கடுமையாக பின்பற்ற வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
தொற்று பாதிப்பினால் அதிகப்பட்ச எண்ணிக்கை தொடர்ந்து பதிவாகி வரும் நிலையில், பொதுமக்கள் குறிப்பாக ஆலயங்களுக்கு செல்லும் பக்தர்கள் அரசாங்கம் விதித்துள்ள விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ஆலய நிர்வாகங்களும் தத்தம் ஆலயத்தில் அனைத்து விதிமுறைகளும் முழுமையாக பின்பற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை உறுதிச் செய்து கொள்ள வேண்டும்.
எதிர்வரும் அக்டோபர் 17ஆம் தேதி இந்துக்கள் நவராத்திரி விழாவைக் கொண்டாடவிருக்கும் நிலையில், தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு முன்பு போல நவராத்திரி விழாவை பெரிய அளவில் நடத்த முடியாது. மிதமான அளவில் குறிப்பிட்ட அளவிலான பக்தர்களைக் கொண்டு மட்டுமே நடத்த முடியும். குறிப்பாக, நகர்வலம், ஆலய வளாகத்திற்கு வெளியே செய்யும் நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும்.
மேலும், கோவிட்-19 புதிய பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில் ஆலயங்களில் எஸ்.ஓ.பி விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்படும் சாத்தியத்தையும் நாம் எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
என்றும் இறைச் சேவையில்,
ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் PMW.,JMW.,AMK.,BKM.,PJK
தேசியத் தலைவர்,மலேசிய இந்து சங்கம்