சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்வோம்!

அனைவருக்கும் வணக்கம்.

மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்கும் சக்தியைப் போற்றும் விரதமாக நாம் தற்போது நவராத்திரி விழாவைக் கொண்டாடி வருகிறோம்.

அதேநேரத்தில், நாடும் உலகமும் கோவிட்-19 நச்சில் பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதை நாம் நன்கு அறிவோம். உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் வலிமை சேர்க்கும் விரதங்களையும் விழாக்களையும் விமர்சையாக கொண்டாடி பழகிய நாம், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நவராத்திரி விழாவை மிதமான அளவில் கொண்டாடும்படி கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பாக, சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் கட்டுப்பாடு உத்தரவினால் ஆலயங்கள் பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளன. இது நமக்கு பெரும் குறை என்றாலும் இல்லத்திலேயே நாம் அனைவரும் முழு மனதோடு எல்லாம் வல்ல இறைவனை வேண்டி உலகை ரட்சிக்கும்படி பிரார்த்தித்துக் கொள்வோம்.

நம் பிரார்த்தனைகளில் சிறந்த ஒன்று கூட்டுப் பிரார்த்தனை. தற்போதைய நிலையில், ஒரே இடத்தில் கூடி நின்று பிரார்த்தனை செய்வது சாத்தியம் இல்லை. ஆனாலும், நாம் அனைவரும் அவர்தம் இடங்களிலேயே ஒரே நேரத்தில் பிரார்த்தனை மேற்கொள்ளுதல் அதே பலனைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை, 23.10.2020ஆம் தேதி நாம் அனைவரும் ஒன்றிணைந்து நவராத்திரி பூஜையில் உலக மற்றும் மக்கள் விரைவில் நலம் பெற வேண்டி தீபம் ஏற்றி சிறப்பு பிரார்த்தனை ஒன்றை மேற்கொள்வோம்.

ஆலயங்களும் இந்த சிறப்பு பிராத்தனையை மேற்கொள்ள வேண்டுமாயின் கேட்டுக் கொள்கிறேன்.இதனை வட்டாரப் பேரவைகள் பொறுப்பேற்று இந்துக்களுக்கும் தங்கள் வட்டாரத்தில் உள்ள ஆலயங்களுக்கும் தெரிவுப்படுத்தி, சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என அடியேன் கேட்டுக் கொள்கிறேன்.

என்றும் இறைச் சேவையில்,

ஶ்ரீகாசி சங்கபூசன் தங்க.கணேசன்

தேசியக் கௌ. பொதுச் செயலாளர்

மலேசிய இந்து சங்கம்

You may also like...