ஆலயங்களைத் திறக்கவும் திருமணம் நடத்தவும் அனுமதி!

24.06.2020 –

தேசிய பாதுகாப்பு மன்றம், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு ஆகியவை அறிவித்துள்ள புதிய செயல்பாட்டு தர விதிமுறையை (SOP) பின்பற்றி ஆலயங்களைத் திறக்க அனுமதி வழங்கப்படுவதாக மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

நாட்டிலுள்ள பெரும்பாலான ஆலயங்களைத் திறக்க மத்திய அரசாங்கமும் மாநில அரசுகளும் அனுமதி அளித்துள்ளன. குறிப்பாக, கெடா, பினாங்கு, பெர்லீஸ், பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், திரெங்கானு, கிளந்தான், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநில அரசுகள் தத்தம் மாநிலத்திலுள்ள இந்து ஆலயங்களைத் திறக்க புதிய விதிமுறைகளுடன் அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதனைப் பின்பற்றி ஆலயங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அதேவேளையில், கூட்டரசு பிரதேசம், மலாக்கா ஆகிய மாநிலங்களில் உள்ள ஆலயங்களை எதிர்வரும் 26.06.2020ஆம் தேதி முதல் திறக்க மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன.

ஆனால், ஜொகூர் மற்றும் பகாங் மாநில அரசுகள் ஆலயங்கள் திறப்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடாத நிலையில், மாநிலத்தில் உள்ள ஆலயங்களைத் திறக்க அனுமதி இல்லை என இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

ஒரு மீட்டர் கூடல் இடைவெளி, உடல் வெப்ப பரிசோதனை, முக கவரி அணிதல், மைசெஜாத்ரா செயலி பயன்படுத்தி பதிவு செய்தல் அல்லது வருகையாளர் புத்தகம் ஏற்பாடு செய்தல் உட்பட புதிய செயல்பாட்டு தர விதிமுறைகளை ஆலயங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதோடு, ஆலயத்தில் சமய வகுப்பு அல்லது கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை.

அதேவேளையில், இன்று அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதன்படி, வரும் ஜூலை முதலாம் தேதி முதல் திருமணம் அல்லது நிச்சயதார்த்தத்தை நடத்தலாம். திருமணம் அல்லது நிச்சயதார்த்தத்தை 3 முதல் 5 மணி நேரத்தில் நடத்தி முடிப்பதோடு அதிகப்பட்சம் 250 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இந்த எண்ணிக்கை திருமணம் நடக்கும் இடத்தின் கொள்ளளவை பொறுத்து மாறுப்படும் குறிப்பாக, கூடல் இடைவெளியைப் பொறுத்து, இடத்தின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கு பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். உணவு பரிமாற தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக அரசு அறிவித்துள்ள புதிய விதிமுறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

என்றும் இறைச்சேவையில்,

ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் PMW.,JMW.,AMK.,BKM.,PJK

தேசியத் தலைவர்,

மலேசிய இந்து சங்கம்