நாட்டில் அரசியல் நிலைத்தன்மை உறுதிப் பெறவும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுப்படவும் சிறப்பு பிரார்த்தனை

மரியாதைக்குரிய மாநிலப் பேரவைத் தலைவர்கள், வட்டாரப் பேரவைத் தலைவர்கள் மற்றும் ஆலயத் தலைவர்களின் கவனத்திற்கு,

வணக்கம். இந்து சமய மேன்மைக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் தொடர்ந்து பங்காற்றி வரும் உங்கள் அனைவருக்கும் மலேசிய இந்து சங்கத்தின் வணக்கம். நம் நாட்டில் தற்போது நிலவி வரும் அரசியல் மாற்றங்கள் மற்றும் அரசியல் நிலைத்தன்மையின்மையும் உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் (கோவிட்-19) தாக்குதலிருந்தும் மக்கள் விடுப்பட, நாளை 29.02.2020 சனிக்கிழமை, நாட்டில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

தற்போதைய அரசியல் நிலைத்தன்மையால் நாட்டில் மக்களிடையே ஒற்றுமை பாதிக்கப்படாமல் இருக்கவும் சமயங்களிடையிலான நல்லிணக்கம் தொடர்ந்து மேம்படவும் இந்த சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட வேண்டும்.

மேலும், நம் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் கட்டுப்பாட்டில் இருந்தாலும் உலக ஜீவராசிகள் அதிகமாக பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்த சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது.. நாடு மற்றும் உலக நலனுக்காக இறைவனிடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்வோம்.

இறைச் சேவையில்,

ஶ்ரீகாசி சங்கபூசன் தங்க.கணேசன் AMN.,ASA

தேசியக் கௌ. பொதுச் செயலாளர் மலேசிய இந்து சங்கம்