நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்! கெராஸ் அமைப்புக்கு மலேசிய இந்து சங்கம் கண்டனம்!

ஜனவரி 12- அண்மைய காலமாக, Gerakan Rakyat Malaysia (GERAS) எனும் அமைப்பு முகநூலில் ஆலயங்களின் படங்களைப் பதிவேற்றம் செய்து ஆலயங்களை அகற்றுமாறு கூறி வருவதை அடுத்து அந்த அமைப்புக்கு மலேசிய இந்து சங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. அதே நேரத்தில் இந்து ஆலயங்களை சட்டவிரோத கோயில்கள் என்று கூற கெராஸ் அமைப்புக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் இந்து சங்கம் கேள்வி எழுப்புகிறது.

சீபீல்டு ஆலய கலவரத்தின் போது காயமடைந்த தீயணைப்பு வீரர் சகோதரர் முகமட் அடிப் பின்னர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில், இதற்கு இந்து ஆலயங்கள் தான் காரணம் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணை இன்னும் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அனைவரும் அமைதி காப்பது நல்லது.

மலேசியாவில் உள்ள ஆலயங்கள் பற்றிய தகுதி நிலையை உறுதிப்படுத்த மலேசிய இந்து சங்கத்திற்கு மட்டுமே தகுதி உள்ளது என்பதையும் இங்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறோம்.

கெராஸ் அமைப்பு, மக்களிடையே குழப்பத்தையும் குறிப்பாக இந்து மக்களிடையே கலக்கத்தையும் ஏற்படுத்தி நாட்டின் அமைதியை சீர்க்குலைக்கும் வழியை உண்டாக்கி வருவது கண்டிக்கத்தக்கது.

நாட்டில் சமய மற்றும் ஆலய விவகாரங்களைக் கண்காணிப்பதற்கும் அதன் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும் மலேசிய இந்து சங்கம் இயங்கி கொண்டிருக்கும் நிலையில் மாற்று சமயத்தினர் இவ்விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. இது தேவையில்லாத பதற்றங்களை உண்டாக்கும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதேவேளையில், படங்களை மட்டுமே பதிவேற்றம் செய்து வரும் கெராஸின் தகவல்களின் அடிப்படையில் மாநகர மன்றங்களும் நகராண்மைக்கழகங்களும் இந்து ஆலயங்கள் மீது கை வைப்பதை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும்.

ஆலயம் தொடர்பில் பிரச்சனைகள் இருந்தால் அவர்கள் உடனடியாக மலேசிய இந்து சங்கத்தின் ஆலோசனையை பெற்றுச் செயல்படுவது அனைத்திற்கும் நல்ல தீர்வாக அமையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.