பக்தர்கள் செய்யும் தவறுகள்! தண்டிக்க ஆலயங்களுக்கு அதிகாரம் உண்டு; மலேசிய இந்து சங்கம் அறிவுறுத்து!

செப்டம்பர் 27- இந்துக்கள் தங்களின் புனித தலமாக கருதும் ஆலயங்களில் அண்மையக் காலமாக தகாத செயல்கள் நடைபெறுவது அதிகரித்து வருவதைக் கண்டு மலேசிய இந்து சங்கம் வருத்தம் கொள்கிறது. பார்ப்போரின் மனதிற்கு உளைச்சலை ஏற்படுத்தும் இவ்வாறான செயல்களைத் தண்டிக்க சம்பந்தப்பட்ட ஆலயங்களுக்கு அதிகாரம் உண்டு என்பதை மலேசிய இந்து சங்கம் அறிவுறுத்திக் கொள்ள விரும்புகிறது.

ஆன்மாவை இறைவனோடு லயிக்க வைக்கும் இடம் தான் ஆலயங்கள். ஆனால், அண்மைய காலமாக ஆலயங்களில் நடக்கும் சம்பவங்கள் யாவும் பக்தர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

குறிப்பாக, அண்மையில் பத்துமலை திருத்தலத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலியை தூக்கியவாறு படியேறி சென்று பிறந்தநாள் கொண்டாடியது அங்கிருந்த பலருக்கு அதிருப்தியை உண்டாக்கியது உண்மை. இச்சம்பவம் நடந்தபோது அதனை ஆலய நிர்வாகமோ அல்லது அங்கிருந்த பக்தர்களோ தடுத்தி நிறுத்தி இருக்கலாம்.

அதேபோல, தற்சமயம் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு காணொளியையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்து ஆலயத்தில் விலங்குகளைப் பலியிடுவது தவறானதாகும். ஆனால், சம்பந்தப்பட்ட காணொளியில், சேவல், ஆடு ஆகியவை பலியிடப்பட்டதோடு பன்றி ஒன்றும் பலியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்து சமயத்திற்கு முரணானது என்பதோடு இது ஏற்றுக் கொள்ள முடியாத விசயமாகும். அச்சம்பவம் எங்கு நடந்தது என்பது உறுதிச் செய்யப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் தக்க நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை ஆலயங்கள் உறுதிச் செய்யவேண்டும். மீறி நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆலய நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஆலய நிர்வாகத்திற்கு முழு அதிகாரமும் உண்டு என்பதை மலேசிய இந்து சங்கம் கூற விரும்புகிறது.

அதேவேளையில், சமயத்திற்கு புறம்பான சம்பவங்கள் நடக்கும்போது சம்பந்தப்பட்ட ஆலயங்கள்  மௌனம் காத்தால் ஆலய நிர்வாகம் மீது மலேசிய இந்து சங்கம் தக்க நடவடிக்கை எடுக்கும் என்பதையும் இங்கு தெளிவுப்படுத்த விரும்புகிறது என்று அதன் தேசியத் தலைவர் ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் தெரிவித்தார்.