16.02.2021-
பள்ளிகளில் குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளில் இந்து சமய புறக்கணிப்பும் திராவிட கொள்கையைப் பரப்பும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதையும் கண்டு மலேசிய இந்து சங்கம் வருத்தம் கொள்கிறது. கல்வி அமைச்சின் பாடத்திட்டப் பிரிவின் சில அதிகாரிகள் பள்ளிகளில் திராவிட கொள்கைகளைப் பரப்புவதை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
அண்மைய காலமாக கல்வி அமைச்சில் உள்ள சில அரசாங்க அதிகாரிகள் திராவிட கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை முன்னிருத்தி சில காரியங்களை மேற்கொண்டு வருவதை அறிய முடிகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மலேசிய இந்து சங்கம் கல்வி அமைச்சுக்கு கடிதம் எழுதும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தமிழ்ப்பள்ளிக்கான ஆறாம் ஆண்டுப் புத்தகத்தில் பெரியாரின் கொள்கையும் அவரைப் பற்றிய செய்தி திணிப்பும் இந்து சமய புறக்கணிப்பும் மேலோங்கி இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
வருங்காலங்களில் இளம் தலைமுறைக்குப் பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய இம்மாதிரியான விஷமத்தனமான காரியங்களை மறைமுகமாக மேற்கொண்டு வரும் அரசாங்க அதிகாரிகள் இதனை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
மேலும், பள்ளி பாட நூலில் தை மாத முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்ற கருத்து திணிக்கப்படுவதையும் மலேசிய இந்து சங்கமும் நாட்டில் உள்ள பெரும்பாலான தமிழர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
என்றும் இறைச் சேவையில்,
ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் PMW.,JMW.,AMK.,BKM.,PJK
தேசியத் தலைவர்மலேசிய இந்து சங்கம்