பழைய காணொளிகளைப் பரப்பாதீர்கள்; மக்களிடையே பதற்றத்தை உண்டாக்க வேண்டாம்! ஜம்ரி வினோத் மீதான விசாரணை முறையாக நடக்கிறது! மலேசிய இந்து சங்கம் அறிவுறுத்து!

3 மே 2019-

நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைக்கும் வகையிலும் மக்களிடையே பதற்றத்தை உண்டாக்கும் வகையிலும் பழைய காணொளிகளை மீண்டும் மீண்டும் பகிர வேண்டாம் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

அண்மையில், இந்து சமயத்தை இழிவுப்படுத்தும் வகையில் முகமட் ஜம்ரி வினோத் எனும் மத போதகரின் காணொளி வைரலாக்கப்பட்டதை அடுத்து அவருக்கு எதிராக நாடளாவிய நிலையில் மொத்தம் 876 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன. பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸ், ஜம்ரி வினோத்தை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர். பின்னர், அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு கடந்த மே முதலாம் தேதி அவரை விடுவித்தனர். அதுவும், அவர் போலீஸ் பிணையில் மட்டுமே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார், முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் மேற்கொண்ட விசாரணையின் முடிவு அட்டர்னி ஜெர்னல் அலுவலகத்திடம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், ஜம்ரி வினோத் மீதான குற்றச்சாட்டுகளை அட்டர்னி ஜெர்னல் அலுவலகமே முடிவு செய்யும். எனவே, ஜம்ரி வினோத் மீதான விசாரணைகள் சட்ட ரீதியாக முறையாக நடந்து வருகிறது என்பதை மலேசிய இந்து சங்கம் தெளிவுப்படுத்த விரும்புகிறது.

அதேநேரத்தில், இவ்விவகாரத்தை மலேசிய இந்து சங்கம் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஜம்ரி வினோத் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படாமல் போனால், மலேசிய இந்து சங்கம் சில தொழிலதிபர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் இணைந்து மேல் நடவடிக்கை எடுக்க ஆவணம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, ஜம்ரி வினோத் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை மலேசிய இந்து சங்கம் உறுதி செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேவேளையில், சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இந்து சமய கடவுள்களை இழிவுப்படுத்தும் ஷா கிரிக் எனும் சமய போதகரின் காணொளி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த காணொளி 10 வருடங்களுக்கு முன் நடந்த விவகாரம் ஆகும். அந்த பழைய காணொளியை மீண்டும் மீண்டும் பகிர வேண்டாம் என பொதுமக்களை இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இவ்விவகாரம் தொடர்பில் அப்போதே இந்து சங்கம் துரித நடவடிக்கை எடுத்தது. இந்து சங்கத்திடம் அவர் மன்னிப்பு கோரிய நிலையில், இந்து வழிப்பாடு குறித்த தெளிவான விளக்கமும் அவருக்கு வழங்கப்பட்டது. இன்று அவர் சமய ஒற்றுமை குறித்து பல இடங்களில் உரையாற்றி வரும் நிலையில், இந்து சமயத்தின் உண்மை நிலையை முஸ்லீம் மதத்தினரும் அறிந்து கொள்ளும் வகையில் உரையாற்றி வருகிறார்.

எனவே, உண்மை நிலை அறியாமல் பழைய காணொளிகளைப் பகிர வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அநாவசிய காணொளிகள் பகிரப்படுவதால் நன்மை ஏற்பட போவதில்லை. மாறாக மக்களிடையே பதற்றமும் அச்ச உணர்வும் மட்டுமே அதிகரிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டால், பொதுமக்கள் அதன் உண்மை நிலையை தெளிவாக அறிந்து கொள்ள முயல வேண்டும்.

மேலும், நாளை தலைநகரில் சில தரப்பினர் பேரணிகள் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதில் பொதுமக்கள் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சமய சர்ச்சைகளுக்கு சாலை பேரணிகள் முடிவாக அமையாது. இதனால் வீண் பதற்றம் மட்டுமே அதிகரிக்கும். எனவே நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நாம் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அதேவேளையில், ஜம்ரி வினோத் விவகாரம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்து, சரியான முறையில் விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸ் துறைக்கு மலேசிய இந்து சங்கம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது என அதன் தேசியத் தலைவர் ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் தெரிவித்தார்.

You may also like...