06.06.2021
முழு நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு காலத்தில் பூக்கடைகளைத் திறக்க அரசாங்கம் அனுமதிக்கவில்லை. இதனால் வியாபாரிகள் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளனர் என்பதோடு இந்துக்களின் வழிப்பாட்டுக்கும் பூக்கள் கிடைக்காமல் பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. எனவே, அரசாங்கம் பூக்கடைக்களைத் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கோரிக்கையை முன்வைக்கிறது.
இந்தியர்களின் குறிப்பாக இந்துக்களின் அன்றாட வழிப்பாட்டுக்கு பூக்களின் பயன்பாடு மிக முக்கியமானது. அன்றாட பூஜைகளுக்கும், இறப்பு காரியங்களுக்கும் இந்துக்கள் பூக்களை அதிகமாகவே பயன்படுத்துவர். தற்போது பொதுமக்களுக்கு ஆலயங்கள் திறக்கப்படவில்லை என்றாலும் ஆலயத்தில் காலை மாலை என இருவேளையும் நித்திய பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதற்கும் பூக்கள் கிடைப்பதில்லை. இந்துகள் தத்தம் இல்லத்திலேயே பூஜைகளை மேற்கொள்ளவும் பூக்கள் கிடைப்பதில்லை. முறையாக பூஜைகளை மேற்கொள்ள மக்கள் பெரும் அவதியை எதிர்நோக்கியுள்ளனர்.
அதேவேளையில், கேமரன்மலை உட்பட பூ வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். பூக்கள் அழுகி போவதை கண்டு இவர்கள் மனமுடைந்து போயியுள்ளனர். இதில் அதிகமாக இந்திய வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அரசாங்கம் விரைந்து பூக்கடைகளைத் திறக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.