பெர்னாமா – ஆஸ்ட்ரோவில் தமிழ்ச் செய்தி – அமைச்சர் கோபிந்த் சிங்கிற்கு மலேசிய இந்து சங்கம் பாராட்டு!

ஜூன் 11- தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவில் மீண்டும் தமிழ்ச் செய்திகள் ஒளிப்பரப்பாக ஆவணச் செய்த தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கோபிந்த் சிங்கிற்கு நன்றினையும் பாராட்டையும் மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

நாட்டு நடப்புகளை மக்கள் அறிந்து கொள்வது செய்தி வாயிலாக தான். அவ்வகையில், இதற்கு முன்னர் பெர்னாமாவில் தமிழ்ச் செய்திகள் ஒளிப்பரப்புச் செய்யப்பட்டாலும் கடந்த சில ஆண்டுகளாக அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பெர்னாமா தமிழ்ச் செய்தி மீண்டும் தொடர வேண்டும் என இந்தியர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், புதிதாக தகவல் தொடர்புத் துறை அமைச்சராக பதவியேற்ற கோபிந்த் சிங் பெர்னாமாவில் மீண்டும் தமிழ்ச் செய்தி ஒளிப்பரப்ப வேண்டும் என்று கூறினார்.

அதனையடுத்து இன்று (11.06.2018) முதல் ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு ஆஸ்ட்ரோ 502 அலைவரிசையில் தமிழ்ச் செய்தி ஒளிப்பரப்பாக உள்ளது. மேலும், ஆஸ்ட்ரோ விண்மீனிலும் செவ்வாய்க்கிழமை தொடங்கி தமிழ்ச் செய்தி ஒளிப்பரப்பாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நம் நாட்டில் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இந்த இரு தமிழ்ச் செய்தி ஒளிப்பரப்புகளைக் கண்டு மலேசிய இந்து சங்கம் மகிழ்ச்சியடைகிறது. இதற்கு காரணமாக இருந்த அமைச்சர் கோபிந்த் சிங்கிற்கு மலேசிய இந்து சங்கம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.