மகா சிவராத்திரி – அரசாங்கம் அனுமதி

09.03.2021-

எதிர்வரும் வியாழக்கிழமை 11.03.2021ஆம் தேதி நாட்டிலுள்ள ஆலயங்களில் மகா சிவராத்திரி விழாவை இரவு கண்விழித்து கொண்டாட அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எனவே, சிவராத்திரி விழாவை அரசாங்கம் விதித்த அனைத்து செயல்பாட்டு தர விதிமுறைகளை (எஸ்.ஓ.பி) கட்டாயம் பின்பற்றி கொண்டாட வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

மலேசிய இந்து சங்கம் கடந்த பிப்ரவரி மாதம் அரசாங்கத்திடம் இந்துக்களின் ஐந்து முக்கிய விழாக்களை நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்த நிலையில், சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஆலயங்களில் மகா சிவராத்திரி விழாவைக் கொண்டாட அனுமதி வழங்குவதாக கடந்த சனிக்கிழமை தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு கடிதம் வெளியிட்டது.

மகா சிவராத்திரி அன்று (11.03.2021) இரவு 10 மணி முதல் மறுநாள் (12.03.2021) காலை 6 மணி வரை ஒற்றுமைத்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் காலையும் மாலையும் 6 மணி முதல் 10 மணி வரை ஆலயம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சிவராத்திரி அன்று நான்கு கால பூஜையைத் தாராளமாக மேற்கொள்ளலாம்.

அதேநேரத்தில், அரசாங்கம் அறிவித்துள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு (சி.எம்.சி.ஓ) பகுதியில், 50% விழுக்காடு பக்தர்களின் எண்ணிக்கையை ஆலயங்கள் உறுதி செய்ய வேண்டும். 100 பேர் அமரக் கூடிய ஆலயம் எனில் 50 பேர் மட்டுமே ஒரு நேரத்தில் ஆலயத்தில் இருக்க முடியும். அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்தால் பக்தர்கள் வெளியேறியப்பின் ஆலயத்தைச் சுத்தம் செய்த பின், அடுத்து வரும் பக்தர்களை அனுமதிக்கலாம்.

அதேவேளையில், மீட்சிப்பெறும் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு (ஆர்.எம்.சி.ஓ) பகுதியில் ஆலய வளாகத்தின் அளவைப் பொறுத்து ஆலய நிர்வாகம் பக்தர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கலாம்.

மேலும், ஒரு மீட்டர் கூடல் இடைவெளி, முகக்கவரி அணிதல், வருகையாளர் பதிவு, வெப்ப பரிசோதனை மற்றும் கைத்தூய்மி பயன்பாடு ஆகியவற்றை பக்தர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

அதேவேளையில், எதிர்வரும் மார்ச் 28ஆம் கொண்டாடவிருக்கும் பங்குனி உத்திர விழாவைக் கொண்டாட அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இரத ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்பதையும் மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

எனவே, சிவ ஆலயங்கள் மட்டுமின்றி மகா சிவராத்திரி பூஜையை மேற்கொள்ளும் அனைத்து ஆலயங்களும் நாளை மறுநாள் சிவராத்திரியை எந்த தடையும் இன்றி கொண்டாடலாம், பக்த அன்பர்கள் இறைவனை வேண்டி அருள் பெறலாம் என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.