10 ஜனவரி 2022-
தவறான தகவலை உண்மை போல் சித்தரிக்க முயற்சித்து மக்களைக் குழப்பியது போதும், தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதலாம் தேதி தான் மாறாக சிலர் கூறுவது போல தை மாதம் முதலாம் தேதி அல்ல என்பதை மலேசிய இந்து சங்கம் மீண்டும் நினைவுறுத்த விரும்புகிறது.
எதிர்வரும் 14.01.2022ஆம் தேதி இந்துக்களும் தமிழர்களும் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடவிருக்கின்றனர். இயற்கைக்கும் இயற்கையாய் நின்று அருள் பாலிக்கும் இறைவனுக்கும் நன்றி கூறும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஆண்டாண்டுகளாக பொங்கலை இறைவனோடு தொடர்புப்படுத்தி சமயப் பண்டிகையாக நாம் கொண்டாடி வரும் நிலையில், தமிழர்களின் பாரம்பரியமும் கலாச்சாரமும் என்றும் நிலைத்திருக்கும் வகையில் இந்நன்னாளை தமிழர் திருநாளாகவும் நாம் கொண்டாடி வருகிறோம்.
ஆனால், சில ஆண்டுகளாக ஒரு சில தரப்பினர் தங்களின் சுய ஆதாயத்திற்கு மக்களைக் குழப்ப எண்ணியும் ஒற்றுமையைச் சீர்குலைக்க நினைத்தும், சித்திரையில் கொண்டாடப்பட்ட தமிழ்ப் புத்தாண்டினை தை மாதம் முதலாம் தேதிக்கு மாற்ற முயற்சித்து வருவது நோக்கத்தக்கது.
தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காக இம்மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்ட போதும் தெளிவான சான்றுகள் முன்வைக்கப்படவில்லை. இருப்பினும், அவசியமில்லாமல் சிலர் நம் நாட்டிலும் இதைப் பின்பற்றவும் இதனைப் பயன்படுத்தி மக்களைக் குழப்பவும் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சரி, தை முதலாம் தேதி தான் தமிழ்ப்புத்தாண்டு என்றால் அதற்கு சான்று எங்கே என வினவினோம். இதுவரை தெளிவான பதில் இல்லை. இல்லாத கவிதைப் பாடலை இருப்பதாக காட்டினார்கள், அதன் உண்மை தன்மை பற்றி வினவினோம் அதற்கும் இதுவரை பதில் இல்லை. 1935ஆம் ஆண்டு நடந்த 500 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கூறினர். அக்கூட்டம் திருவள்ளுவராண்டு குறித்து முடிவெடுக்க கூடியதும் 50 தமிழறிஞர்கள் மட்டுமே கலந்து கொண்டதும் நிரூபிக்க பட்டது. பின்னர் தமிழகத்தில் பின்பற்றப்படுவதாக சாக்கு கூறப்பட்டது. தமிழ்ப்புத்தாண்டினை தை மாதத்திற்கு மாற்ற முயன்றதாக கருதப்படும் இன்றைய தமிழகத்தை ஆளும் அரசியல் கட்சி தனது அரசிதழ் நாட்காட்டியில் சித்திரை முதலாம் தேதியே தமிழ்ப்புத்தாண்டு என தெளிவாக கூறிவிட்டது.
காலங்காலமாக கொண்டாடப்பட்ட சித்திரை முதலாம் தேதி தான் தமிழ்ப்புத்தாண்டு என்பது மீண்டும் தெளிவாக்கப்பட்டப்பின் நம் நாட்டில் இன்னும் ஒரு தரப்பினர் குட்டைக்குள் ஊறிய மட்டை போல மீண்டும் தமிழ்ப்புத்தாண்டு பற்றிய சர்ச்சை கொண்டு வருவது எதற்காக? இன்னும் எத்தனைக் காலம் தான் பொய்யை மெய்யென காட்ட முயல்வீர்கள்?
மலேசிய இந்து சங்கம் மற்றும் இந்து அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சித்திரை ஒன்று தான் தமிழ்ப்புத்தாண்டு என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் கடந்தாண்டு புத்தகமாக வெளியிட்டது. டாக்டர் ஜெயபாலன் எழுதி ‘தமிழ்ப் புத்தாண்டும் தைத் திருநாளும்’ என்ற தலைப்பில் வெளிவந்த அப்புத்தகத்தில் சர்ச்சைகளும் உண்மைகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
எனவே, இன்னும் தமிழ்ப்புத்தாண்டு குறித்து தெளிவடையாதவர்கள் சான்றுள்ள புத்தகங்களைப் படித்து தெளிவடையுங்கள். இல்லை மக்களை குழப்ப வேண்டும் என்றால் நாட்டில் எவ்வளவோ விசயங்கள் உண்டு, அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேன்மைக்குரிய எங்களின் சமயத்தையும் மொழியையும் தாழ்த்த நினைக்காதீர்கள் என மலேசிய இந்து சங்கம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது.