17 ஜனவரி 2023-
சேறு, சகதி, குப்பையை மட்டும் வாறுவதற்குப் பயன்படும் மண்வாரி இயந்திரத்தின் இரும்புக்கரத்தில் உற்றார்-உறவினர்-ஊரார் முன்னிலையில் பொங்கல் வைத்து, அதைக் காணொளி வழி விளம்பரப்படுத்திய தரப்பினரின் செயல், பாரம்பரிய பெருமை கொண்ட நம் சமூகத்திற்கும் சமயத்திற்கும் பெருமை சேர்க்காது என்று மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ஶ்ரீகாசி சங்கபூசன் தங்க. கணேசன் தெரிவித்துள்ளார்.
உலகமே இன்று புதுமையை நோக்கித்தான் பயணிக்கிறது. இதில் ஆன்மிகமும் அடங்கும். அதற்காக, புதுமை என்ற பெயரிலோ அல்லது பொருள் வளம் இருக்கிறது என்பதற்காகவோ பொங்கல் திருநாளின் அடிப்படியையே சிதைக்க எவரும் முற்படக்கூடாது.
உலகுக்கு அச்சாணியைப் போல இருக்கும் உழவுத் தொழிலை மதிக்கும் வகையில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கவும் மாடுகளை அரவணைக்கவும் சமுதாய ஒற்றுமையை வலுப்படுத்தவும் பல்லாயிர ஆண்டுகளாக 4 நாள் விழாவாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின்போது, சில வீடுகளில் நான்கு நாட்களிலும் ஏழெட்டு புதுப்பானைகள் வரை பயன்படுத்துவது வழக்கம். இதின் உள்ளார்ந்த மறுபொருள், மண்பாண்டம் செய்யும் மக்களுக்கும் ஆதரவு அளிப்பதாகும்.
தவிர, மழைக்காலத்தில் பாடுபட்ட விளைநிலத்தில் நெற்பயிர் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருப்பதுடன் கோடைக்கால தொடக்கம், பயனை அறுவடை செய்யும் தருணம் ஆகியவற்றை வரவேற்கும் பாரம்பரியமும் பண்பாடும் வெளிப்படுவதுதான் பொங்கல் திருவிழா.
இவ்வளவு கருத்தை வெளிப்படுத்தும் பொங்கல் விழாவின்போது, பொங்கல் பானைக்குப் பதிலாக மண்வாரி இயந்திரத்தின் அழுக்கு அத்தியாயம் கொண்ட இரும்புக்கரத்தைப் பயன்படுத்தி பொங்கல் வைத்த அன்பர்கள் பாரம்பரிய பெருமையை உணரத் தவறிவிட்டனர் என்பது தான் உண்மை.
இது தவறு என சுட்டிக்காட்டுவதை விடுத்து அதனை காணொளி எடுத்து மகிழ்வோடு பகிரும் மக்களின் செயல் உண்மையில் வருந்தத்தக்கதே. இதற்கிடையில், ஒரு சில இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து மதுபானத்தில் பொங்கல் வைத்ததாக சமூக ஊடகங்களில் செய்தி பரவிவருகிறது. இது, உண்மையாக இருந்தால் மிகவும் கண்டனத்திற்கும் வருத்தத்திற்கும் உரியது. நவீன கால இளைஞர்கள், முன்னோரும் சான்றோரும் வகுத்த நெறிமுறையை புறக்கணிப்பதுடன் அல்லாமல் ஆன்மிக வழியில் மூர்க்கத்தனத்தை புகுத்துவது நல்லதல்ல என தங்க கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.