மலர் மாலையில் ‘பீர்’ போத்தல்; மலேசிய இந்து சங்கம் கடும் கண்டனம்!

ஜூலை 30-  இந்துக்களின் புனித பொருளாக கருதப்படும் மாலையில் ‘பீர்’ போத்தல் சேர்த்து கட்டப்பட்ட சம்பவத்தை மலேசிய இந்து சங்கம் மிக வன்மையாக கண்டிக்கிறது. வியாபாரமாக இருந்தாலும் புனித பொருட்களைச் சமய நெறிகளுக்கு மீறி தயார் செய்வதைக் கண்டு இந்து சங்கம் ஒருபோதும் அமைதி காக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் இந்த ‘பீர்’ போத்தல் மாலை, மலாக்காவில் உள்ள கடையில் தயார் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரைத் தொடர்பு கொண்ட மலாக்கா மாநில இந்து சங்க பேரவை அவர்களுக்கு இது தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகின்றது.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் திருப்தி கொள்ள வேண்டும் என்பதால் அவர்கள் வழங்கும் ‘ஆர்டர்’களைக் கண்டிப்பாக செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை வியாபாரிகள் கைவிட வேண்டும். உயர்நிலையில், புனிதமான இறை சின்னமாக போற்றப்படும் மாலையில் இதுபோன்ற மதுபான பொருட்களை இணைத்துக் கட்டுவது நமது இந்து சமய நெறிகளுக்கு முரணானது. அது மட்டுமல்லாமல் இதனால் மற்ற சமயத்தினர் இந்து சமயத்தின் வழிப்பாட்டினை தவறாக கருதும் நிலையும் உண்டாகும் என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

அதேவேளையில், இறைவனின் உறைவிடமான ஆலயங்களில் அரசியல் பிரச்சாரங்களுக்கு இடம் அளிக்கும் சம்பவங்களையும் மலேசிய இந்து சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. சுங்கை கண்டிஸ் இடைத்தேர்தலை ஒட்டி அங்குள்ள ஆலயம் ஒன்றில், நடந்து கொண்டிருந்த பௌர்ணமி பூஜையை இடையில் நிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.

மன நிம்மதி வேண்டி, இறைவனை வணங்க ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் இம்மாதிரியான சம்பவங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகுவதாலும் ஆலயங்களுக்குள் அரசியல் ஆதாய செயல்கள் நடக்க கூடாது என்பதாலும் மலேசிய இந்து சங்கம் இவ்விசயத்தைக் கடுமையாக கருதுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

You may also like...