மலாய்காரர்களின் தன்மானம் காக்கும் மாநாட்டில் எடுத்த அனைத்து தீர்மானங்களையும் அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் – மலேசிய இந்து சங்கம் வலியுறுத்து!

அக்டோபர் 7-

நேற்று, மலாய்காரர்களின் தன்மானம் காக்கும் மாநாட்டில் கொண்டு வரப்பட்ட 5 தீர்மானங்களையும் மலேசிய அரசாங்கம் ஏற்றுக் கொள்ள கூடாது என்பதை மலேசிய இந்து சங்கம் வலியுறுத்திக் கொள்கிறது.

புதிய ஆட்சியின் கீழ் நாட்டின் ஒற்றுமையும் நல்லிணக்கமும் மேம்படும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் நாளுக்கு நாள் இனத்துவேச மற்றும் மொழி துவேச பேச்சுகள் வெளிப்படையாகவே அதிகரித்து வருவது அச்சத்தை மூட்டுவதாய் உள்ளது.

நாட்டின் ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையாக தமிழ் மற்றும் சீனப்பள்ளிகள் இருப்பதாகும் அவற்றை 2026-க்குள் முற்றாக அகற்ற வேண்டும் என்ற தீர்மானம், பிரதமர் துன் மகாதீர் கலந்து கொண்ட மலாய்க்காரர்களின் தன்மானம் காக்கும் மாநாட்டில் எடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

நாட்டின் கல்வித்துறையின் அளப்பரிய வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கியவை தாய்மொழிப் பள்ளிகள் தாம். தாய்மொழிப் பள்ளிகளில் பயின்று நாட்டின் பொருளாதார மேன்மைக்கும் இன வேறுபாடு அற்ற ஒற்றுமை சமுதாயத்திற்கும் வழித்தடம் அமைத்தவை இந்த தாய்மொழி பள்ளிகள் தாம். ஆனால், இன்று என்னவோ, தமிழ், சீன பள்ளிகள் தாம் நாட்டின் ஒற்றுமைக்கு தடையாக இருப்பதாக காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.

இன்றைய நிலவரப்படி, உண்மையில் தேசியப் பள்ளிகளினால் தான் பல இன மக்களிடையிலான ஒற்றுமை சீர்குலைந்து வருகிறது. தேசியப்பள்ளிகளில் உள்ள இனத்துவவாதம் இதற்கு சான்று. பாடத்திட்டத்திலேயோ அல்லது புறப்பாட நடவடிக்கையிலேயோ தேசியப்பள்ளியில் படிக்கும் பிற மொழி மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். அதுவும் இது வெளிப்படையாகவே நடக்கிறது. ஆனால், 2026க்குள் கட்டங்கட்டமாக தாய்மொழி பள்ளிகளை அகற்ற வேண்டும் என்ற தீர்மானம், நம் மாணவர்களை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பது முக்கியமான கேள்வி.

மேலும், அரசாங்கத்தின் எல்லா முக்கிய பதவிகளுக்கும் மலாய்காரர்களையே நியமிக்க வேண்டும் என்ற தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. தகுதி அறிந்து, செயல்திறன் அறிந்து தான் இங்கு பதவிகளும் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஒட்டு மொத்தமாக அரசாங்கத்தின் முக்கிய பதவிகள் குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர்களுக்கே வழங்க வேண்டும் என்பது அறிவாளிதனமானது அல்ல. இனங்கள் விகிதாச்சார அடிப்படையில் அரசாங்க பணிகள் வழங்கப்பட்டாலும், முக்கிய மற்றும் உயர்மட்ட பதவிகள் நிபுணத்துவம் கொண்ட தகுதியானவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். இன வெறுப்பு கொண்டு மேற்கொள்ளும் தவறான முடிவுகள் நாட்டின் வளர்ச்சிக்கே குந்தகத்தை உண்டாக்கும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதோடு, இஸ்லாமிய விவகாரங்களில் தலையிட சுஹாகாம், மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் மற்றும் அரசு சார்பற்ற சுதந்திர அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது கண்டு மலேசிய இந்து சங்கம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. நாட்டில் ஒற்றுமையும் நல்லிணக்கத்தையும் பேணிக் காக்கவே இந்து சங்கம் போன்ற அமைப்புகள் செயலாற்றி வருகின்றன. மற்ற சமயங்களின் உள் விவகாரங்களில் தலையிட அல்ல. ஆனால், அதேவேளையில் இஸ்லாமிய விவகாரங்களில் இந்து சமய விழுமியங்கள் பாதிக்கப்படும் நிலை வந்தால், சட்ட விதிகளுக்குட்பட்டு அதில் தலையிடவும் அமைப்புகளுக்கு உரிமையும் கடமையும் உண்டு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்நிலையில், மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் துன் மகாதீர், மலாய்காரர்களை முன்வைத்து தனது உரையை நிகழ்த்தி இருந்தாலும் கூட, மற்ற சமுதாயங்களைக் குறைத்து பேசியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

வந்தவர்கள் இங்கேயே தங்கி விட்டார்கள் என்ற கூற்று, நாட்டின் வளர்ச்சிக்கு ரத்தம் சிந்தி, வேர்வை சிந்தி பாடுப்பட்ட மற்ற சமுதாயத்தினரை இழிவுப்படுத்துவதைப் போலாகும். இன்று உலகமே கண்டு வியக்கும் மலேசியாவின் வளர்ச்சிக்கும் நாட்டின் சுதந்திரத்திற்கும் தன்னையே அர்பணித்தவர்கள் மலாய்காரர்கள் உட்பட தமிழ், சீன சமுதாயத்தினரும் தான் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

என்றும் இறைச்சேவையில்,

ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் தேசியத் தலைவர், மலேசிய இந்து சங்கம்

You may also like...