7 ஆகஸ்டு 2023-
மலேசிய இந்துக்கள் பயன் பெறும் விவகாரங்கள் குறித்து பேசவும் மற்றும் இங்குள்ள இந்தியர்களின் ஆணி வேரான இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்திக் கொள்ளவும் தலைநகரில் உள்ள மலேசியாவிற்கான இந்திய தூதருடன் மலேசிய இந்து சங்கத்தினர் சந்திப்பு கூட்டம் நடத்தினர்.
கடந்த 04.08.2023 வெள்ளிக்கிழமை, இந்திய தூதர் மேதகு பி.என். ரெட்டி அவர்களை மலேசிய இந்து சங்கத்தின் துணைத் தலைவர் திரு. கணேஷ் பாபு தலைமையில் தேசியக் கௌ. பொதுச் செயலாளர் திரு.மாணிக்கவாசகம், தேசியப் பொருளாளர் திரு. ராஜேந்திரன், மத்தியச் செயலவை உறுப்பினரும் நெகிரி செம்பிலான் மாநிலப் பேரவைத் தலைவருமான சிவ ஶ்ரீ டாக்டர் அ.கோபி மற்றும் நெகிரி செம்பிலான் பேரவையின் அரசாங்கத் தொடர்பு பிரிவின் பொறுப்பாளர் திரு. தயாளன் ஆகியோர் சந்தித்தனர்.
இச்சந்திப்பில், கலாச்சாரம், சமயம், சுற்றுலா, கல்வி, பொருளாதாரம் மற்றும் வரலாற்றுத் தளங்களில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் இந்திய தூதரகமும் இந்து சங்கமும் இணைந்து பணியாற்றுதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தல், மலேசிய இந்திய மாணவர்களுக்கு ஆயுர்வேதம், மருத்துவம், சமயம், உயிரியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் உதவித்தொகை வழங்குதல், சென்னை, திருச்சிராப்பள்ளி மற்றும் புது டெல்லி விமான நிலையங்களுக்கான குடிநுழைவு மற்றும் சுங்கத்துறை தொடர்பான ஒழுங்குமுறை பற்றிய புதிய மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்குதல், தென்கிழக்கு ஆசியாவில் உலக இந்து நாகரிக மாநாட்டை யுனெஸ்கோ, இந்து சங்கம் மற்றும் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் பிரிவு ஆகியவற்றுடன் கூட்டாக ஏற்பாடு செய்தல், விசாவிற்கு விண்ணப்பிக்கும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு விசா முறையை உருவாக்குதல் உட்பட பல விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.