மலேசியாவில் திராவிட மாடல் பற்றிய கருத்தரங்கு எதற்கு?

10 பிப்ரவரி 2023-

தமிழ்நாட்டின் திராவிட மாடல் பற்றிய கருத்தரங்கை நம் நாட்டில் நடத்த வேண்டியதன் அவசியம் என்ன? அதிலும் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை இந்த கருத்தரங்கு நடத்துவதன் நோக்கம் என்ன என மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஶ்ரீகாசி சங்கபூசன் தங்க. கணேசன் கேள்வி எழுப்பினார்.

நாளை (11.02.2023) மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் ஏற்பாட்டில் தமிழ்நாட்டின் திராவிட வளர்ச்சி மாடல் குறித்த கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு அதில் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் கலந்து கொள்ள விருப்பதாகவும் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

திராவிட மாடல் என்பது இறை மறுப்பு கொள்கையைச் சார்ந்த விசயம் என்பது ஊர் அறியும். இதனை, இறையாண்மைக்கு முக்கியத்துவம் தரும் மலேசியாவில் நடத்துவதும், அதிலும் குறிப்பாக, மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளதும் நாட்டு மக்களிடையே சலசலப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நம் நாட்டின் ருக்குன் நெகாராவின் முதல் கோட்பாடே இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் தான். இவ்வாறு இறையாண்மைக்கே முதன்மை கவனம் செலுத்தப்படும் நம் நாட்டில் இறை மறுப்பு சார்ந்த திராவிட கருத்தரங்கு என்ன நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது என கேள்வி எழும்புகிறது. இதில் மறைமுக காரணம் ஏதும் இருக்குமா? அல்லது மெல்ல திராவிட கொள்கைகளை இங்கே பரப்ப எடுக்கும் முயற்சியா என்ற எண்ணம் உருவாகுகிறது.

பாடத்திட்ட ஆய்வு குறித்த கற்றல் எனில் அவை வகுப்புகளுக்கு உட்பட்டவை. ஆனால், இம்மாதிரியான கருத்தரங்குகள் பொதுவில் நடத்தப்படும்போது, மற்றவர்களுக்கு நமது இறையாண்மை மீதே மாயை உண்டாகும் நிலை உருவாகும். பல்கலைக்கழகங்கள் கல்விக்கூடங்களாக மட்டுமே இருத்தல் சிறப்பு. மாறாக, கருத்துப்பிறழ்வு உருவாக்கும் தளமாக மாறிவிடக்கூடாது என்பதை நினைவில் கொள்வோம். இம்மாதிரியான கருத்தரங்குகள் நமது நம்பிக்கைகளுக்கு எதிராக விளங்கினால் இந்து சங்கம் மற்றும் இதர இந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து கண்டன குரல் எழுப்புவதோடு தக்க நடவடிக்கை எடுக்கவும் தயங்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

You may also like...