மலேசிய இந்துக்களின் விசுவாசத்தைப் பற்றி பேச ஸாகீர் நாயக்கிற்கு என்ன தகுதி உண்டு? மலேசிய இந்து சங்கம் கண்டனம்!

ஆகஸ்டு 12-  நாட்டில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்துக் கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஸாகீர் நாயக் மீண்டும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளார். இந்நாட்டு இந்துக்கள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரைக் காட்டிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தான் அதிகமாக ஆதரிக்கின்றனர் என்று கூறி இந்துக்களின் விசுவாசம் மீது கேள்வி எழுப்புவதை மலேசிய இந்து சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

நாட்டில் 62வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடவிருக்கும் நிலையில், வேண்டுமென்றே இந்துக்களின் உணர்ச்சியைத் தூண்டி பார்க்கும் வகையில் இந்துக்கள் மலேசியா மீது வைத்திருக்கும் விசுவாசத்தை இழிவுப்படுத்தி பேசியிருக்கும் ஸாகீர் நாயக்கின் செயல் மிகவும் அபாயகரமானதாக கருதப்படுகிறது.

இந்நாட்டில் நிரந்தர குடியிருப்பு அந்தஸ்தைப் பெற்றிருக்கும் ஸாகீர், அண்மையில் பாஸ் கட்சியின் ஏற்பாட்டிலான பேரணியில், இவ்வாறு பேசியிருப்பது இந்துக்களிடையே அதிருப்தியையும் மன கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதோடு, மலேசியாவில் வாழும் பல இனத்தவர்கள் மத்தியில் வெறுப்புணர்வை விதைக்கும் வகையிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசிய இந்துக்கள் இந்தியாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், தற்போது நாட்டில் வாழும் இந்துக்கள் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது தலைமுறையைக் கடந்தவர்கள். மலேசியாவை மட்டுமே தனது தாய் நாடாக கொண்டவர்கள். இந்தியா மீது ஈர்ப்பும் மதிப்பும் இருந்தாலும் மலேசியா மீதே தமது முழு விசுவாசத்தையும் கொண்டிருப்பவர்கள். இதனை மலேசிய மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

இதற்கு நல்ல சான்று, கடந்த 14வது பொதுத் தேர்தல் ஆகும். கடந்த தேர்தலில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டும் மேற்பட்ட இந்துக்கள் – இந்தியர்கள் மகாதீர் தலைமையிலான பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு ஆதரவு வழங்கினர். இதனை பிரதமர் உட்பட யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என நம்புகிறோம்.

உண்மையில், சொந்த நாடான இந்தியாவிற்கும் விசுவாசமில்லாமல், அடைக்கலம் கொடுத்த மலேசியாவிற்கு விசுவாசம் இல்லாமல் அமைதியைக் கெடுத்துக் கொண்டிருக்கும் ஸாகீர் நாயக் தான் சற்றும் விசுவாசம் இல்லாதவர்.

மேலும், இந்தியாவில் வாழும் முஸ்லீம்களைக் காட்டிலும் மலேசிய இந்துக்கள் அதிக செல்வாக்குடன் வாழ்கின்றனர் என்றும் 100 விழுக்காடு உரிமைகளைப் பெற்றிருக்கின்றனர் என்றும் ஸாகீர் கூறியுள்ளது சமயங்களுக்குள் விஷமத்தைப் பரப்புவதற்கு ஒப்பாகும். நாட்டில் ஒற்றுமை சீர்குலைக்கும் வகையில், தொடர்ந்து இந்துக்கள் மீது இனத்துவேச கருத்துக்களைப் பரப்பி கொண்டிருக்கும் ஸாகீர் நாயக் மீது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியை மலேசிய இந்து சங்கம் முன் வைக்கிறது. முன்பு, ஸாகீர் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, பிரதமர் அவர்கள், ஸாகீர் நாயக் இனத்துவேச பேச்சு பேசாத வரை அவரை அனுப்ப மாட்டோம் என்று கூறியிருந்தார். இப்போது பகிரங்கமாகவே இனத்துவேச கருத்துக்களைக் கூறியிருக்கும் ஸாகீர் மீது நம் பிரதமரும் அரசாங்கமும் என்ன நடவடிக்கை எடுக்க போகின்றனர்? அரசாங்கம் இன்னமும் அமைதியாக இருக்க போகிறதா என மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் கேள்வி எழுப்பியுள்ளார்.

You may also like...