
செப்டம்பர் 23-
மலேசிய இந்து சங்கத்தின் பாஸ் கட்சி உடனான சந்திப்பை சில பொறுப்பற்ற நபர்கள் சமூக வலைத்தளங்களில் வேறு வகையாக திரித்துக் கூறி வருவதை நிறுத்தி கொள்ளுமாறு மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
கடந்த 15.09.2020ஆம் தேதி நடைபெற்ற பாஸ் கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹஜி அப்துல் ஹடி அவாங் உடனான சந்திப்பு அவர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்ற சந்திப்பாகும். தற்போதைய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக விளங்கும் பாஸ் கட்சியினர், மற்ற சமயத்தினருடன் நல்லிணக்கத்தை அதிகரிக்கும் வகையிலேயே இந்த சந்திப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
முன்னதாக, பாஸ் கட்சியின் சில முக்கிய பிரமுகர்கள் மலேசிய இந்து சங்கத்தை சந்திக்க விருப்பம் தெரிவித்த வேளையில், சங்க தலைமையகத்தில் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அதில், இரு தரப்பின் நல்லிணக்கம் மற்றும் நாட்டில் நடக்கும் சமயம் சார்ந்த விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. அச்சந்திப்பிற்கு பிறகே, ஹஜி ஹடி அவாங் மலேசிய இந்து சங்கத்துடன் மற்றொரு சந்திப்பு நடத்த அழைப்பு விடுத்தார். மரியாதை நிமித்தமாகவும் சமய விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் மலேசிய இந்து சங்கம் சந்திப்பில் கலந்து கொள்ள முடிவெடுத்தது.
அச்சந்திப்பில், மதமாற்ற விவகாரம், 355வது சட்டத்திருத்த மசோதா, திருமதி இந்திரா காந்தி தனது மகளை மீட்கும் விவகாரத்தில் இருக்கும் முட்டுக்கட்டைகளை அகற்றுவது, அரசியலமைப்பு சட்டத்தின் உரிமையின் கீழ் சமயம் மற்றும் தாய்மொழியைப் பின்பற்றுவதற்கான உரிமைகள் தொடர்ந்து நிலைநாட்டப்படுதல் போன்ற விசயங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு கலந்துரையாடப்பட்டது. மேலும், இந்து சமயம் பற்றிய தெளிவும், இந்து சமயம் குறித்து இஸ்லாமிய சமய போதகர்கள் தவறாக பேசுவதை தடுப்பதற்கான நடவடிக்கை குறித்தும் பாஸ் கட்சி தலைவருடன் விவாதிக்கப்பட்டது. இந்து சங்கம் எழுப்பிய அனைத்து விவகாரங்கள் தொடர்பாக ஹடி அவாங் விவேகமான பதில்களை வழங்கினார். இந்த சந்திப்பு பரஸ்பர புரிந்துணர்வோடு நல்லதொரு அடித்தளத்தை ஏற்படுத்தியது எனலாம். நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து நடத்தப்பட்ட இச்சந்திப்பின் முக்கிய விசயங்களை வேண்டுமென்றே தவிர்த்து, உண்மைக்கு புறம்பான தகவல்களைச் சில பொறுப்பற்ற நபர்கள் புலனம் வழி பரப்பி வருவது குறித்து இந்து சங்கம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இதன் உண்மை அறியாமல் புலனத்தில் வரும் அவதூறுகளைப் பகிர்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.