மலேசிய இந்து சங்கத்தின் 41ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் மூன்று மாதத்திற்குள் நடைபெறும்!

அக்டோபர் 4 –  கடந்த 24 ஆம் ஜூன் அன்று நடைபெற இருந்த மலேசிய இந்து சங்கத்தின் 41 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு எதிராகவும் மத்திய பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவுக்கு  எதிராகவும், எழுவரால் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கின் முதல் கட்டமாக நீதிபதியின் முன்னிலையில் இருதரப்பினருக்கும் சமரசம் செய்ய முயற்சிக்கப்பட்டது. ஆனாலும் அம்முயற்சி வெற்றி பெறவில்லை. ஆகையால், வழக்கு விசாரணை 25-9-2018 அன்று நடைபெற்றது.

இவ்விசாரணையின் பொது தடையுத்தரவு பெற முதலாவது கோரிக்கையாக இருந்த, ஆண்டு பொதுக்கூட்ட அறிக்கை ரத்து செய்ய வேண்டும் என்பதனை வாதியின் தரப்பு வாபஸ் பெற்றது.

அடுத்த கோரிக்கையானது, கடந்த 17-6-2018  அன்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது, 7 உறுப்பினர்களின் வேட்பு மனுதாக்கல் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டதை மீண்டும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதாகும். இதில் 1 உறுப்பினர் வழக்கை வாபஸ் பெற்றார்.

விசாரணை அன்று வாதி தரப்பில் கணக்கறிக்கை அனுப்பும் முறையை பற்றி எதிர்காலத்தில் எந்த ஒரு குழப்பமும் வராமல் இருக்க, நீதிபதியிடம் ஒரு தெளிவான விளக்கத்தை வேண்டி முன்வைக்கப்பட்டது.

பிரதிவாதியான மலேசிய இந்து சங்கம் மற்றும் வாதியான அறுவரின் வாதங்களை பெற்ற நீதிபதி, 4-10-2018 அன்று வழக்கின் தீர்ப்பை வழங்குவதாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து, இன்று 4-10-2018 தனது தீர்ப்பில் நீதிபதி அறுவரில் ஐவருடைய வேட்பு மனுக்களை மறு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். இதில் ஒருவருடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

அதேவேளையில், தனது தீர்ப்பில் நீதிபதி ஆண்டு பொதுக்கூட்டத்தை இனி நடத்தலாம் என்றார். இதனை மூன்று மாத காலத்திற்குள் நடத்தும்படி உத்தரவிட்டார். ஆண்டு பொதுக்கூட்ட அறிக்கையுடன் கணக்கறிக்கையை 21 நாட்களுக்குள்  அங்கத்தினரின் சங்க பதிவேட்டில் இடம்பற்றிருக்கும் ஆகக்கடைசி முகவரிக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார். இதனை குறுந்தட்டு (CD) வாயிலாகவும் அனுப்பலாம் என்று சிபாரிசு செய்தார்.

வாதியின் தரப்பில் செலவு தொகை கோரப்பட்டது. இதற்கு இந்து சங்கத்தின் சார்பில் ஏற்கனவே ஒரு முறை உறுப்பினர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட அறிக்கைக்காக செலவு செய்யப்பட்டிருந்தது. மீண்டும் ஒரு முறை மறுபடியும் அனுப்பப்பட வேண்டும் என்பதனால், அதற்கும் செலவு உள்ளது. ஆகையால், செலவு தொகை அளிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனை நீதிபதி ஏற்றுக்கொண்டு, இது அங்கத்தினர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என்பதால் அவரவர் செலவு தொகையை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தெரிவித்தார்.

சங்க நலன் கருதி, இவ்வழக்கின் தீர்ப்பை இந்து சங்கம் மேல் முறையீடு செய்யாது. இனி ஆண்டு பொதுக்கூட்டத்தை நடத்தும் ஏற்பாடுகளை இந்து சங்கம் முன்னெடுக்கும் என்பதனை தெரிவிக்கின்றோம்  என்று மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் கூறினார்.