மலேசிய இந்து சங்கத்தின் மகுட விழா; 45ஆவது தேசிய திருமுறை ஓதும் விழா 2023

14 செப்டம்பர் 2023-

மலேசியாவில் வாழ்கின்ற 19 இலட்சத்து 70 ஆயிரம் இந்து மக்களின் தாய் அமைப்பான மலேசிய இந்து சங்கம் கொண்டாடும் சமய விழாக்களில் தலையாய விழாவான திருமுறை ஓதும் விழா, நாடு முழுவதும் நடைபெற்று, அதன் நிறைவுக் கட்டமாக தேசியத் திருமுறை ஓதும் விழாவை எட்டியுள்ளது என்று அதன் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ சங்கபூசன் தங்க. கணேசன் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு கொண்டாடப்படும் 45-ஆவது தேசியத் திருமுறை ஓதும் விழா மலேசியத் தினமான செப்டம்பர் 16-ஆம் நாள், முழுநாள் நிகழ்வாக சிரம்பான், பண்டார்ஸ்ரீ செண்டாயான், ‘மெட்ரிக்ஸ்’ பன்னாட்டு பள்ளி வளாகத்தில் காலை 7:00 முதல் மாலை 6:00 மணிவரை நடைபெற உள்ளது.

கடந்த 6 மாத காலமாக 90 வட்டாரப் பேரவைகளின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் நடைபெற்ற திருமுறைப் போட்டிகளை அடுத்து, 9 மாநிலப் பேரவைகளின் திருமுறை விழாக்களும்  நடைபெற்று, சிவநெறிய சிந்தனை இந்துக்களின் மனதை ஆட்கொண்ட நிலையில் தற்பொழுது தேசியத் திருமுறை ஓதும் விழா நடைபெறுகிறது என்று தங்க. கணேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த 58 ஆண்டுகளாக இந்து சமய காவல் அமைப்பாக மலேசியாவில் விளங்கும் இந்து சங்கம், திருமுறை ஓதும் விழாக்களின் மூலம், இலட்சக்கணக்கான மக்களின் மனப் பாத்திகளில் சிவநெறியப் பயிரையும் தமிழையும் ஒருசேர வளர்த்து வருகிறது என்பதை இந்து சங்கம் பெருமையுடன் பறைசாற்றிக் கொள்கிறது.

திருமுறை ஓதும் போட்டி, பேச்சுப் போட்டி, பதிக பாராயணம், பெரிய புராணம் ஓதுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்குகொள்ளும் மாணவர்கள், பெரியவர்கள், திருமுறை நடுவர்கள், குடும்ப உறுப்பினர்கள், விழா ஏற்பாட்டாளர்கள், இந்து சங்க தேசிய-மாநில-வட்டாரப் பொறுப்பாளர்கள், இந்து சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என நாடு முழுவதிலும் இருந்து ஆயிரத்து ஐந்நூறு பேர் பாரம்பரிய உடையில் சிரம்பான் மாநகரை நோக்கி  படையெடுக்கும் இந்த 45-ஆவது தேசியத் திருமுறை ஓதும் விழா,  சிற்றுண்டி  உபசரிப்புடன் காலை ஏழு அளவில் தொடங்க இருக்கிறது.

தொடர்ந்து, சிவாச்சாரியார் டாக்டர் ஆனந்த் கோபி தலைமையில் நடைபெற இருக்கும் சிறப்பு பூசனை, கொடியேற்றம், நடராஜர்-அன்னை சிவகாமி சமேதர், மற்றும் நால்வர் பெருமக்களின் ஊர்வலம், இறைவணக்கம், இந்து சங்க எழுச்சிப் பாடல், இந்து சங்கத் தேசியச் செயலாளர் க.மாணிக்கவாசகத்தின் வரவேற்புரை, இந்து சங்கத் தேசியத் துணைத் தலைவரும் திருமுறை ஏற்பாட்டுக்குழு தலைவருமான கணேஷ் பாபுவின் சிறப்புரை, மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ  முனைவர் மு.சரவணனின் சிறப்புரைக்குப் பின் ஒன்பது மணி அளவில் திருமுறைப் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. மதிய உணவுக்குப்பின், தங்கப் பதக்கப்போட்டி, சிறப்புத் தலைவர்கள் வருகை, இந்து சங்க தேசியத் தலைவர் உரை, மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், மலேசிய இந்து சங்கத்தின் புரவலர் டான்ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் ஆகியோரின் சிறப்புரை, தேவார நாயகம் விருது மற்றும் ஆறு தங்கப் பதக்கங்களுக்கான வெற்றியாளர்கள் அறிவிப்பு, தொடர்ந்து நன்றியுரையுடன் மாலை 6:00 மணியுடன் இந்த விழா நிறைவுபெறும்.

இந்த நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்க பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது மலேசியவிற்கான இந்தியத் தூதர் பி.என்.ரெட்டி கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...