ஜூன் 30- கடந்த ஜூன் 24ம் தேதி நடக்கவிருந்த மலேசிய இந்து சங்கத்தின் 41வது ஆண்டு பொதுக் கூட்டம் மீது விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றம் வந்த நிலையில் மலேசிய இந்து சங்கம் எதிர்வாதம் புரியவில்லை.
கடந்த ஜூன் 20ஆம் தேதி, ஆண்டுக்கூட்டம் மீது இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்ட நிலையில் மலேசிய இந்து சங்கம் தனது 41வது ஆண்டு பொதுக்கூட்டத்தை நடத்தவில்லை என்ற அடிப்படையில், வழக்கின் போது விளக்கமளித்தல் அவசியம் இல்லை என்ற காரணத்தாலும் வழக்கு தொடர்ந்த 7 பேரின் குற்றச்சாட்டு தவறானது என்பதாலும் இவ்வழக்கை எதிர் கொள்ள மலேசிய இந்து சங்க மத்திய செயலவை உறுப்பினர்கள் கடந்த 23.06.2018ஆம் தேதி நடந்த அவசரக் கூட்டத்தில் முடிவு எடுத்த நிலையிலும் நேற்று நடந்த வழக்கில் எதிர்வாதம் செய்யப்படவில்லை.
அதேநேரத்தில் இந்த வழக்கினை முழுமையாக விசாரணை செய்ய வேண்டும் என்று மலேசிய இந்து சங்க வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இவ்வழக்கை எந்த தடையும் இன்றி விசாரிக்க எதிர்வரும் ஆகஸ்டு 20ஆம் தேதியை நீதிபதி அஜிசுல் அஸ்மி நிர்ணயித்தார்.
ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு எதிராக வழக்கை தொடர்ந்த சிலர் தகுதியற்ற உறுப்பினர்களாகவும் சிலரின் அங்கத்துவம் இன்னும் ஓராண்டு காலம் பூர்த்தி ஆகாத நிலையிலும், சிலரின் தேர்தலுக்கான விண்ணப்பங்கள் முழுமை செய்யப்படாததால் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் இவர்கள் வழக்கை தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் 24ஆம் தேதி 41வது ஆண்டு பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனைத்து விசயங்களும் மலேசிய இந்து சங்க சட்டத்தினைப் பின்பற்றி முறையான அடிப்படையிலும் கடந்த 40ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும் மத்திய செயலவையினர் முடிவின் அடிப்படையிலும் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டன என்பதை இங்கு தெளிவுப்படுத்த விரும்புகிறோம்.
இவற்றின் அடிப்படையில், மலேசிய இந்து சங்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட இந்த வழக்கை எதிர்கொள்ள சங்கம் முடிவு செய்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே, கடந்த ஜூன் 24ஆம் தேதி நடக்கவிருந்த சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக, கடந்த ஜூன் 20ஆம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டது என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே, சட்டத்தின் அடிப்படையில் அனைத்து விசயங்களிலும் வெற்றி பெற்று ஆகஸ்டு மாதம் நடக்கும் விசாரணைக்குப் பின்னர் சங்கத்தின் 41வது ஆண்டுக் கூட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும்.
அதுவரையில், தற்போதுள்ள மத்திய செயலவை நிர்வாகம் தொடர்ந்து சேவையாற்றி வரும் என்பதையும் மாநில, வட்டாரப் பேரவைகள் தொடர்ந்து தங்களின் சமய நிகழ்ச்சிகளையும் சேவைகளையும் எந்தவொரு தடையும் இல்லாமல் மேற்கொள்ளலாம் என்பதையும் இதன்வழி தெரிவித்துக் கொள்கிறோம்.