மீண்டும் தடையுத்தரவுக்கு வழிவகுக்க வேண்டாம்!
27 ஜூலை 2020 –
கட்டுப்பாட்டுக்குள் இருந்த கோவிட்-19 நச்சில் பெருந்தொற்று பரவல் எண்ணிக்கை தற்போது ஒவ்வொரு நாளும் குறையாமல் அதிகரித்து வரும் நிலையில், சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆலய வழிபாடுகளை நடத்த வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
மீட்சிபெறும் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு காலத்தில் பொதுமக்களுக்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அண்மைய காலமாக எண்ணிக்கை அதிகரிப்பும் புதிய வழிப்பாட்டுத் தல தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள சம்பவமும் நமக்கு வருத்தமளிக்கிறது.
இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களும் தங்களின் வழிப்பாட்டுகளை அரசாங்கம் விதித்துள்ள செயல்பாட்டு தர விதிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக, ஆலயத்தில் இருக்கும்போது முகக்கவசம் அணிதலும் 1 மீட்டர் கூடல் இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மலேசிய இந்து சங்கம் மீண்டும் வலியுறுத்தி கொள்கிறது.
குறிப்பாக, எதிர்வரும் ஆடி வெள்ளி, ஆடிப்பெருக்கு போன்ற விழாக்களின் போது ஆலய வழிப்பாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மேலும், ஆலயங்களில் திருவிழா, கடற்கரை சார்ந்த ஊர்வலங்கள், ஆடிப்பெருக்குக்கு கடற்கரையில் பெரிய அளவில் கூட்டம் கூடுவது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
கோவிட்-19 பெருந்தொற்று பரவலைத் தடுக்கவும் நம் சமுதாயத்தைப் பாதிக்காமல் இருக்கவும் அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் வேண்டுகோளையும் நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு தர விதிமுறைகளையும் கடைப்பிடிப்பதோடு மீண்டும் ஒரு தடையுத்தரவுக்கு நாமே காரணமாக இருக்க வேண்டாம் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
என்றும் இறைச் சேவையில்,
ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் PMW.,JMW.,AMK.,BKM.,PJK
தேசியத் தலைவர்,மலேசிய இந்து சங்கம்