முஸ்லீம் அல்லாத சமயங்களைக் கட்டுப்படுத்த சட்டமா?

08.09.2021-

ஷரியா சட்டங்களை வலுப்படுத்தும் கூட்டரசு அரசாங்கத்தின் திட்டங்களில் ஒரு பகுதியாக, முஸ்லீம் அல்லாத சமயங்களைக் கட்டுப்படுத்துவது, அவற்றின் வளர்ச்சியை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து பரிந்துரைக்கப்படும் என சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை துணையமைச்சர் அமாட் மார்ஸூக் ஷாரி கூறியிருப்பது பல மதங்கள் மற்றும் பல்லின மக்கள் வாழும் மலேசியாவிற்கு அவசியமற்றது ஆகும். இதுக் குறித்து சர்வ சமய மன்றம் வெளியிட்ட அறிக்கையை ஆமோதிக்கிறோம் என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

துணையமைச்சரின் இந்த பொறுப்பற்ற மற்றும் சர்ச்சைக்குரிய பரிந்துரையைக் கண்டு மலேசிய இந்து சங்கம் அதிருப்தி கொள்கிறது. அமைச்சர் மற்றும் துணையமைச்சரின் முரண்பாடான அறிக்கைகள், இவ்விவகாரம் குறித்து கூட்டங்களில் விவாதிக்கப்படவில்லை என்பதைத் தெளிவாக காட்டுகிறது.

கோவிட்-19 பெருந்தொற்றினால் நாடும் நாட்டு மக்களும் பெரும் அவதியை எதிர்நோக்கியுள்ள நிலையில், கூட்டரசு அரசாங்கத்தின் துணையமைச்சரின் இந்த அறிவிப்பு அவசியம் தானா? இது புதிதாக அமைந்துள்ள அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பிரதமர் அவர்கள் மலேசிய குடும்பம் எனும் கருத்தை முன்னிருத்துகிறார் எனில் மக்களுக்கு ஏன் வருத்தத்தையும் அசௌகரியத்தையும் கொடுக்க வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேள்வி எழுப்புகிறது.

கூட்டரசு அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள, நாட்டு குடிமகன் ஒருவன் சமயத்தை பின்பற்றி அதனை நடைமுறைப்படுத்துவது குறித்த உரிமையை துணையமைச்சர் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது. தனது சொந்த அறிக்கையில் “நாட்டின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் காப்பாற்றுவது அனைவரின் கடமை. கூட்டரசு அரசியலமைப்பை மதிக்க வேண்டியது அவசியம்” என்று கூறியதை துணையமைச்சரும் பின்பற்ற வேண்டும்.

தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம், மக்களுக்கு எது அவசியமோ எது தேவையோ அதற்கு முன்னுரிமை வழங்குவதை முக்கிய கடப்பாடாக கொள்ள வேண்டும் எனவும் மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

You may also like...