விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழாவை செயல்பாட்டு தர விதிமுறையை முழுமையாக பின்பற்றி கொண்டாடுவோம்!

20.08.2020 –

எதிர்வரும் சனிக்கிழமை எல்லாம் வல்ல விநாயகருக்கு உகந்த நாளான விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடவிருக்கும் இந்துக்கள், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு செயல்பாட்டு தர விதிமுறையை (எஸ்.ஓ.பி) முழுமையாக கடைப்பிடித்து விழாவினைக் கொண்டாட வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

நாட்டில் கோவிட் 19 நச்சில் பெருந்தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், தொற்று பரவல் முழுமையாக தீரவில்லை. எனவே, இந்நிலையைக் கருத்தில் கொண்டும் தற்போது நாம் மீட்சிப்பெறும் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு காலத்தில் இருப்பதையும் கவனத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக இல்லாமல் ஆலய வளாகத்திற்குள்ளாகவே கொண்டாடுவது சிறப்பாகும்.

பால்குடம் அல்லது இரத ஊர்வலம் போன்ற ஆலய வளாகத்திற்கு வெளியே ஏற்பாடு செய்யக்கூடியவற்றை தவிர்க்க வேண்டும். அரசாங்கம் நிர்ணயித்த 1 மீட்டர் தூர கூடல் இடைவெளி, மற்றும் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுப்பாட்டு ஆகிய விதிகள் முழுமையாக பின்பற்றப்படுவதை ஆலய நிர்வாகத்தினர் உறுதி செய்தல் கட்டாயமாகும். அதோடு, ஆலயத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க பொதுமக்கள் ஆலயம் செல்வதற்கான நேர திட்டமிடலை மேற்கொள்ளுதல் அவசியமாகும்.

70 வயத்திற்கு மேற்பட்டவர்களும் 12 வயதிற்குட்பட்டவர்களும் மற்றும் உடல்நல குறைவு உள்ளவர்களும் ஆலயத்திற்கு வருவதைத் தவிர்ப்பது நல்லது. முடிந்தளவில் வீட்டிலேயே இல்ல வழிப்பாட்டினை மேற்கொள்வது ஊக்குவிக்கப்படுகிறது.

குறிப்பாக, கெடா, பினாங்கு ஆகிய மாநிலங்கள் மஞ்சள் மண்டலமாக உருவாகியுள்ள நிலையில், அங்குள்ள இந்துக்கள் ஆலயம் செல்லும்போது அதிக கவனத்துடன் இருப்பது மிக அவசியமாகும்.

நமது சில அலட்சியமும் நம்மையும் நம் அன்புக்குரியவர்களையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்வோம். நாடும் உலகமும் விரைவில் நச்சில் பெருந்தொற்றிலிருந்து விடுப்பட வேண்டும் என வேண்டி அனைவரும் சமய நெறியோடு விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

என்றும் இறைச் சேவையில்,

ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் PMW.,JMW.,AMK.,BKM.,PJK
தேசியத் தலைவர்,
மலேசிய இந்து சங்கம்

You may also like...