வெள்ளி விளக்கு 

வெள்ளி விளக்கு    

இல்லமெங்கும் ஒளியேற்றுகையில் நம் உள்ளங்களிலும் உண்மையன்பை ஒளிரச் செய்வோம்!   

பக்திநெறிக்கு உரமூட்டும் பக்தி இலக்கியத் தேடல் கொண்ட அருமை அன்பர்களே!   

உங்கள் அனைவரதும் அரிய தேடலுக்குப் பணிவான வணக்கங்கள்!

சென்ற 17.11.2022 முதல் நாம் கார்த்திகை மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம்.  கார்த்திகை என்றவுடன் நம் நினைவில் முதன்மையாக இடம்பெறுவது திருக்கார்த்திகை விளக்கீடே. இதன் புராண வரலாறு என்று பார்க்கும்போது, பல்லாண்டுக் காலமாக ஒருவரோடு ஒருவர் வாதிட்டுக்கொண்டு இருந்த பிரம்மனுக்கும் திருமாலுக்கும் இடையே தோன்றிய அடிமுடி தெரியாத பேரொளியை நினைவூட்டவே கார்த்திகை விளக்கீடு கொண்டாடப்படுகிறது என்று பரவலாகக் கூறப்படுவதைக் காண முடியும். கார்த்திகை விளக்கீட்டுக்கு இந்த நிகழ்ச்சியோடு தொடர்பு இருந்தாலும், சிறிது சிந்தித்துப் பார்த்தால், அரிக்கும் அயனுக்கும் இடையே நடைபெற்ற வாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அடிமுடி தெரியாத அளவுக்குத் தோன்றிய பேரொளி, அதன் அடியையோ முடியையோ காண முடியாத அந்த இருவரும் வேண்டிக்கொண்டதற்கு இணங்க, சிவலிங்க வடிவில் தோன்றிய நாள் சிவராத்திரி என்று போற்றப்பட்டு ஆலயங்களில் எல்லாம் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம். சிவப்பரம்பொருள் சிவலிங்கமாக வடிவெடுத்ததாகச் சொல்லப்படுவதோடு, சிவராத்திரி காலத்தில் தோன்றிய பேரொளி திருவண்ணாமலையாகக் குளிர்ந்தது என்றும் கூறப்படுகிறது. பஞ்ச பூதத் தலங்களுள் திருவண்ணாமலை அக்கினித் தலம் என்று குறிப்படப்படுவது நினைவுகூரத் தக்கது.

திருவண்ணாமலையில் கார்த்திகை விளக்கீட்டுக்குத் தானே அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது என்று எண்ணத் தோன்றும்! அதற்கான தெளிவை, “சைவ சமய புண்ணியகாலம்’ என்னும் தமது நூலில், பண்டிதர் த. சுப்பிரமணியம் என்பவர் குறிப்பிட்டுள்ளார். அரி, அயன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க, பேரொளியானது சிவலிங்க வடிவமாகக் காட்சியளித்தபோது, அவர்கள் இருவரும் அந்தப் பேரொளிக் காட்சியைத் தங்களுக்கு என்றும் காட்டியருள வேண்டும் என்று வேண்டினார்கள். அப்போது பெருமான், ‘கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் நாம் சோதி வடிவைக் காட்டுவோம்” என்று கூறியருளினார். இறைவன் பேரொளி வடிவில் தோன்றுவதையே திருவண்ணாமலை அகண்ட தீபம் நினைவூட்டுகிறது! இறைவனின் இயல்பான ஓலி வடிவத்தைக் குறிக்கும் வண்ணம், நாமும் அகல் விளக்குகளை நம் இல்லமெங்கும் ஏற்றி, எங்கும் ஒளிமயமாக ஒளிரச் செய்கிறோம். எனவே, சிவராத்திரி காலத்தில், பிரம்மவிஷ்ணுக்களின் சர்ச்சையை ஒரு முடிவுக்குக் கொண்டுவர தோன்றிய பேரொளி, கார்த்திகை விளக்கீடு சமயத்தில் அந்த பிரம்மவிஷ்ணுக்களுக்குக் கொடுத்த திருவாக்கை நிறைவேற்றுவதற்காகத் தோன்றிற்று என்னும் உண்மையை இங்கு அறிந்துகொள்ளமுடிகிறது.

இதைத் தவிர மற்றுமொரு குறிப்பையும் நாம் காணுவோம். சில ஆண்டுகளில் ஆலயங்களுக்கும் நம்

இல்லங்களுக்கும் ஒரே நாளிலும், சில ஆண்டுகளில் அடுத்தடுத்த நாள்களிலும் விளக்கீட்டு நாளாகக் குறிப்பிடப்படுவதை நாம் கண்டிருப்போம். இந்த மாறுபாட்டிற்கான காரணம் மிகவும் எளிமையானது. இறைவன் கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரத்தில் பேரொளியாகத் தோன்றினார் என்று மேலே கண்டோம். எனவே, என்றைக்குக் கார்த்திகை நட்சத்திரத்துக்கு உரிய நாளாகக் கணிக்கப்படுகிறதோ அன்றைக்கு ஆலயங்களுக்கு விளக்கீட்டு நாளாகும்; இதைத் திருவண்ணாமலை தீபம் என்றோ, குமராலய தீபம் என்றோ பஞ்சாங்கங்கள் குறிக்கும். என்றைக்கு பௌர்ணமிக்கு உரிய நாளாகக் கணிக்கப்பட்டுள்ளதோ அன்றைக்கு இல்லங்களுக்கு உரிய விளக்கீட்டு நாளாகும். இது சர்வாலய தீபம் என்று குறிப்பிடப்படும். கார்த்திகை நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் ஒரே நாளில் இடம்பெறுவதாகச் சோதிடக் கலை கணித்தால், அப்போது ஆலயம், இல்லம் ஆகிய இரண்டிலுமே ஒரே நாளில் விளக்கீடு இடம்பெறும். திருவண்ணாமலையில் கார்த்திகை நாள் காலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது; இந்தத் தீபத்தைகொண்டுதான் மாலையில் மலைமேல் தீபம் ஏற்றப்படுகிறது கார்த்திகை மாதத்தில் ரோகிணி நட்சத்திரத்துக்குரிய நாள் விஷ்ணுவாலய தீபத்துக்குரிய நாளாகக் கொள்ளப்படுகிறது.

மேலே நாம் பெற்ற சில தெளிவுகளோடு, பண்டிதர் த. சுப்பிரமணியம் அவர்கள், திருமூலரின்  ‘உடம்பெனும் மனையகத்துள்’ என்னும் திருமந்திரப் பாடலின் அடிப்படையில் தீப தரிசனத்திற்குத் தந்துள்ள உட்பொருளை உணர்ந்து பயனுறுவோம்: “எமது உடல் ஒரு மனை (வீடு), உள்ளம் பாத்திரம். அதில் உணர்வாகிய நெய்யை ஊற்றுதல் வேண்டும். உயிரென்னும் திரியை இட்டுப் பிராணன் என்னும் காற்றை நிறுத்தி அறிவுச் சுடரை ஏற்றி அன்பினால் தூண்டிக் கொண்டிருத்தல் வேண்டும் . இடைவிடாது தூண்டிக் கொண்டிருந்தால் ஆணவமாகிய மாயவிருள் அகலும். சிவபரஞ்சோதி தரிசனங் கிடைக்கும். கார்த்திகைத் தீபதரிசனத்தின் உண்மைத் தத்துவம் இதுவேயாகும்”. எங்கெங்கும் பரந்திருக்கும் இறையொளி, ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அனைத்துயிர்களுக்கு உள்ளும் இருந்து அவற்றை இயக்கிக்கொண்டு இருக்கிறது என்னும் உண்மையை நினைவில் கொண்டு அந்த ஒளி. நம்முள் சுடர்விட்டுப் பிரகாசிப்பதற்கு வசதியாக நம் உள்ளங்களை தூய்மைப்படுத்தி அருளுமாறு அந்தப் பேரருளாளனை தெய்வ மணம் கமழும் இந்நேரத்தில் வேண்டுவோம்!

அடுத்த வாரம் சந்திக்கும் வரை அன்பு வணக்கம்!

குறிப்பு: இந்தச் செய்தியை எல்லாக் கோவில்களும் இந்து இயக்கங்களும் வெள்ளிக்கிழமை மாலைப் பூசையின் பின்னோ, கூட்டு வழிபாட்டின் ஓர் அங்கமாகவோ வாசிக்க வேண்டும். விரும்பினால்,

தலைப்பு தொடர்பாக மேலும் கருத்துரைக்கலாம்; முடிந்தால், தலைப்பை பற்றி மேலும் கலந்துரையாடலாம்.

விபரங்களுக்கு: மலேசிய இந்து சங்கம் 03-77844668

You may also like...