ஆலயத்தை அகற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது
17 ஜூலை 2020-
ஏறக்குறைய 100 ஆண்டுகளாக அருள்பாலித்து வரும் ஷா ஆலம், செக்ஷன் 11 ஶ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தை உடைப்பதற்கு நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.
கல்வியமைச்சின் கீழ் உள்ள நிலத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தை அகற்ற வேண்டும் என ஜூலை 12ஆம் தேதியிடப்பட்ட நோட்டிஸ் ஒன்று ஆலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதி முன்பு பாசாலாயாக் தோட்டமாக இருந்தபோதே இவ்வாலயம் அமைக்கப்பட்டு மேட்டுக் கோவில் என்றழைக்கப்பட்டது. 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இவ்வாலயம், நில மாற்றத்திற்கு முன்னமே அமைக்கப்பட்டது என்ற நிலையில், அதற்கு மாற்று இடம் வழங்காமல் ஆலயத்தை அகற்ற வேண்டும் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும், இவ்வாலயத்தை சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ஆலயம் என்று சிலர் கூறுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். சட்ட மாற்றத்திற்கு முன்னமே இந்த ஆலயம் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாலயம் நில மேம்பாட்டுக்கு இடையூறாக இருப்பதாக கூறி நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நில மேம்பாட்டுக்கு இந்த ஆலயம் எவ்வகையிலும் இடையூறாக இல்லை என்பது கண்டறிப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா படாவி அவர்கள் தனது ஆட்சிக் காலத்தின்போது, சுதந்திரத்திற்கு முன் கட்டப்பட்ட ஆலயங்களை உடைக்க மாட்டோம் என்று கூறியிருந்தார். அதனைப் பின்பற்றி இன்றைய அரசும் ஆலயங்களை அகற்ற முற்படுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். அதேவேளையில், தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தையே ஆலயத்திற்கான நிலமாக ஒதுக்க வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது. இது தொடர்பாக, பிரதமருக்கும் சிலாங்கூர் மாநில அரசுக்கும் நில மற்றும் கனிம வள இலாகாவுக்கும் கடிதம் அனுப்பப்படும் என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.