24.11.2022
நாட்டின் புதிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு மலேசிய இந்து சங்கம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
15-ஆவது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மலேசியாவின் 10-ஆவது பிரதமராக ஐந்து நாட்களுக்குப் பின் அன்வார் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மலேசிய இந்து சங்க தேசியப் பேரவை சார்பில் பாராட்டும் வரவேற்பும் தெரிவிப்பதாக அதன் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ சங்கபூசன் தங்க. கணேசன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மக்கள் சுபிட்சமாக வாழவும் சமயம் செழிக்கவும் மற்றும் கல்வி-பொருளாதார மேம்பாட்டிற்கும் நிலையான ஆட்சி தேவை. அத்தகைய ஆட்சிக்கு வழிபிறக்கும் வகையில் புதிய பிரதமரை பொருத்தமான நேரத்தில் நாட்டிற்கு அடையாளம் காட்டிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தஃபா பில்லா ஷாவிற்கு மலேசிய இந்து சமுதாயத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக தங்க. கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.