14 ஏப்ரல் பொதுவிடுமுறை கோரி மகஜர் சமர்ப்பிப்பு

மலேசிய இந்து சங்கம் மற்றும்  7 இந்திய இயக்கங்களும் இணைந்து பிரதமர் துறை சிறப்பு ஆலோசகர், டத்தோ ஹேங் செய் கீ அவர்களை சந்தித்து இந்தியர்களுக்கு கூடுதலாக இரு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்று  மகஜர் ஒன்றை சமர்ப்பித்து உள்ளது.

கடந்த மே மாதம் டத்தோ ஹேங் செய் கீ அவர்கள் இந்தியர்களுக்கு மேலும் ஒரு பொதுவிடுமுறை வழங்கக் கூடிய சாத்தியம் இருப்பதை தெரியப்படுத்தினார். அவரின் ஆலோசனையின் பேரில் மலேசிய இந்து சங்கம் அதன் தொடர்பாக சமய ஆலோசனை மன்றத்தின் ஆலோசனையை கேட்டறிந்தது. மலேசிய இந்து அர்ச்சகர் சங்கம், தெய்வீக வாழ்க்கை சங்கம், ராமகிருஷ்ணா மிஷன், ISKON மற்றும் பிற இந்து இயக்கங்களை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டதே சமய ஆலோசனை மன்றம் ஆகும். சிவ ஶ்ரீ முத்துக்குமார சிவாச்சாரியார், சிவ ஶ்ரீ நித்தியாநந்த குருக்கள், பேராசிரியர் இராஜேந்திரன் பேராசிரியர் திலகவதி ஆகியோரும் இந்த ஆலோசனை மன்றத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கின்றனர். பல வித விசயங்களை ஆராய்ந்து அதன் பின் ஏப்ரல் 14ஆம் திகதி பரிசீலனைக்கு ஏற்ற தேதியாக தேர்ந்தெடுத்து  டத்தோ ஹேங் செய் கீ அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நவம்பர் 2017ஆம் ஆண்டு இந்து இயக்கங்களுடன் மலேசிய இந்து சங்கத்தில் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. மலேசிய இந்து சங்க தலைவர் டத்தோ ஆர்.எஸ் மோகன் ஷான் தலைமையேற்ற இக்கூட்டத்தில், தெலுங்கு சங்க தலைவர் டத்தோ அச்சய குமார் ராவ், மலையாள சங்க தலைவர் டத்தோ சுசிலா மேனன், பெங்காளி சங்க தலைவர் டாக்டர் சென் குப்தா மற்றும் அதன் செயலாளர் திருமதி. நந்திதா கோஸ், மஹராஸ்ட்ரா சங்க தலைவர் திருமதி. சில்பா தக்சலா ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் பிப்ரவரி 14ஆம் திகதியை பொதுவிடுமுறை பரிசீலனை திகதியாக ஏற்றுக் கொண்டனர். அக்கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத சிந்தி சங்க தலைவர் டத்தோ ஷா லால்சந் ரனாய், குஜராத்தி இயக்கத்தலைவர் டத்தோ பூபத்ராய் மற்று மலேசிய குருத்வாரா இயக்கத் தலைவர் சர்தார் ஜகிர் சிங் ஆகியோரும் இத்திகதியை பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்டனர்.

“இந்திய நாட்டு மக்கள் தங்களின் கால நாட்களை சூரியனை கொண்டு கணக்கிடுகின்றனர். சந்திரனை கொண்டும் ஒரு சில கால கணக்கெடுப்பு எடுப்பது வழக்கம் உள்ளது. தமிழ் இந்துக்களை பொருத்தவரை அவர்கள் சூரியனின் இயக்கத்தினை கொண்டே நாட்காட்டிகள் கணக்கிடப்படுகின்றன. பஞ்சாங்க கணக்கேடுப்புகளும் சூரிய இயக்கத்தை சார்ந்தே அமைந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட இராசியில் இருந்து மற்ற இராசிக்கு மாறும் நாளினை ஆண்டின் தொடக்க நாளாக தமிழ் இந்து நாட்காட்டிகள் குறிக்கின்றன. பஞ்சாங்கத்தின் முதல் இராசி மேஷம் ஆகும். ஆகையால், சூரியன் மேஷ இராசியில் சஞ்சரிக்கும் போது அது நாற்காட்டியின் முதல் நாளாக அதாவது புத்தாண்டு பிறப்பாக கணக்கிடப்படுகின்றது. பொதுவாக புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் திகதி நடைப்பெறுகின்றது” என்று இந்து ஆலோசனை மன்ற உறுப்பினர் டாக்டர். திலகவதி விளக்கமளித்தார்.

“இந்திய சமுகத்தினரை தவிர மலேசியாவில் மற்ற மத சமூகத்தினர்களின் புத்தாண்டு பொதுவிடுமுறையாக அனுசரிக்கப்படுகின்றது. நமது இந்தியர்களுக்கு பல்வேறு புத்தாண்டு திகதிகள் இருந்தாலும் பெரும்பலும் தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடும் ஏப்ரல் 14ஆம் திகதியை பரிசீலனை திகதியாக ஏற்றுக் கொள்கிறோம். இது கண்டிப்பாக நமது இந்திய சமூகத்தினருக்கு பயனளிக்கு என்று எதிர்பார்க்கின்றோம்” என்று மலையாளி சங்க தலைவர் டத்தோ சுசிலா மேனன் கூறினார்.

“பல்வேறு சமூகத்தினர் வாழும் இந்நாட்டில் பெரும்பான்மை கொண்ட தமிழர் சமூகத்தினரின் புத்தாண்டு பொதுவிடுமுறையாக அனுசரிக்கப்பட்டால் அது நம்மிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்த்திடும் இந்த சிறப்பு பொதுவிடுமுறை மலேசியர்கள் அனைவரும் நமது சமூகத்தினரின் சிறப்பு அம்சங்களையும் கலாச்சாரத்தையும் அறிந்து கொள்ள வழிவகுக்கும்” என்று குஜராத்தி இயக்கத் தலைவர் டத்தோ பூபத்ராய் ஷா கூறினார்.  

“சிறுபான்மை இந்திய சமூகத்தினர்களுக்கு பயனளிக்க கூடிய இவ்விசயத்தில் பெரிதும் அக்கரை காட்டிய இந்து சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் நன்றி கூறினர். இந்துக்கள் மற்றும் இந்தியர்கள் என்ற நமது அடையாளத்தை வழுப்படுத்துவதற்கு நாம் நீண்ட காலம் உழைக்க வேண்டியுள்ளது” என்று டத்தோ ஆர்.எஸ் மோகன் ஷான் கூறினார்.

விரிவான கலந்துரையாடலுக்கு பிறகு ஏப்ரல் 14ஆம் திகதி பரிந்துரைக்கு ஏற்ற திகதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதற்கு “இந்து புத்தாண்டு” அல்லது “இந்தியர் பெருநாள்” என்ற பெயரும் பரிந்துரைக்கப்பட்டது. சந்திரன் அல்லது சூரியனை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படும் புத்தாண்டில் வேறுபாடுகள் உள்ளது. ஆகவே இந்தியர்களுக்கு முக்கிய நலனுக்காக அனைவரும் பொதுவான ஒரு திகதியை பொது விடுமுறைக்கு ஏற்றுக் கொண்டனர். ஆயினும் உகாதி அல்லது ஓணம் போன்ற மற்ற சமூகத்தினர்களின் புத்தாண்டை கொண்டாட எந்த தடையும் இல்லை.

இறுதியாக ஒரு கூட்டு மகஜர் கையெழுத்தானது. டத்தோ ஆர்.எஸ் மோகன் ஷான் மலேசிய நாட்டின் இந்துக்கள் மற்றும் தமிழர்கள் சமூகத்தின் பிரதிநிதித்தார். தெலுங்கு சங்கம், மலேசிய குத்வாரா இயக்கம், மலையாளிகள் சங்கம் பெங்காலி இயக்கம், சிந்தி இயக்கம் மஹராஸ்ட்ரா மண்டல் மற்றும் குஜராத்தி இயக்கம் ஆகிய 7 சமூகத்தினின் பிரதிநிதியாக அதன் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

“நமது நாட்டில் சிறுபான்மை இந்திய சமூகத்தினருக்கு பிரதிநிதிக்கும் இயக்கங்கள் உள்ளன. ஆனால் பெரும்பான்மை சமூகத்தினர்கள்,  தமிழர்களை அதாவது 75% இந்தியர்களை மலேசிய இந்து சங்கம் பிரதிநிதித்தது. மலேசிய இந்து சங்க உறுப்பினர்களில் 85% தமிழர்களே. இந்து சங்கத்தின் 27 மத்திய செயலவை உறுப்பினர்களில் 24 பேர் தமிழர்களே. அதிலும் நான் பச்சை தமிழன். ஆகவே மலேசிய இந்து சங்கம் தமிழர்களை பிரதிநிதிக்கும் தகுதி கொண்டது, அதன் தலைவர் டத்தோ ஆர்.எஸ் மோகன் ஷான் அவர்களுக்கு மகஜர் கையெழுத்திரும் ஆணை கொடுக்கப்பட்டுள்ளது” என்று மலேசிய இந்து சங்க தேசிய கௌரவ பொதுச் செயளாலர் திரு.கணேசன் கூறினார்.

இதன் தொடர்பாக கருத்துரைத்த டத்தோ டாக்டர் அச்சய குமார் தெலுங்கு சங்கம் பொதுவிடுமுறை திகதி பரிந்துரையை ஏற்றுக் கொள்கின்றது. “ஆயினும் இந்து நாள்காட்டியை பின்பற்றி நாங்கள் உகாதி பண்டிகையை கொண்டாடுவோம். எங்களுக்கு ஏப்ரல் 14ஆம் திகதியை பொதுவிடுமுறையாக அறிவிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஒற்றுமையை முதன்மையாக கொண்டு அனைத்து இந்தியர்களும் தங்களது தனித்துவத்தை இழக்காமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

பல சமூகத்தினரை ஒருங்கிணைத்து பல சிக்கல்களை சமாளித்து இந்த கூட்டு மகஜர் சமர்பிக்கப்பட்டது குறித்து  டத்தோ ஹேங் செய் கீ மலேசிய இந்து சங்கத்திற்கு தனது பாராட்டுதனை தெரிவித்தார். 8 சமூகத்தினர் பிரிவில், தமிழர் (75%), தெலுங்கு, மலையாளம், சிந்தி, குஜராத்தி, பெங்காளி, பஞ்ஜாபி மற்றும் மஹராஸ்ரா ஆகியோர் 98% இந்தியர்கள் மலேசியாவில் உள்ளனர்.

டத்தோ ஹேங் செய் கீ குறிப்பிட்டபடி இது குறித்து மாண்புமிகு பிரதமர் முடிவு செய்வார். பிரதமர் இது குறித்து ஆராய்ந்து மக்களுக்கு பயனளிக்கும்  நல்ல முடிவை அறிவிப்பார் என்று நாங்கள் நம்புகின்றோம். மலேசிய வாழ் அனைத்து இந்தியர்களும் ஒன்றிணைந்து ஆதரவு தருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று டத்தோ ஆர்.எஸ் மோகன் ஷான் தெரிவித்தார்.

You may also like...