பித்ரு தர்ப்பணம் – தெளிவு பெற சிறு குறிப்பு!
தர்ப்பணம் என்பது மூதாதையர்கள் உயர்ந்த ஆன்மீக உலகில் மகிழ்ச்சி மற்றும் உயர்ச்சி அடைய செய்யப்படும் சடங்காகும். இது பஞ்சமஹாயக்ஞம் எனும் ஸ்நானத்தின் (குளியல்) ஒரு பகுதியாகும்.
குளித்த பிறகு (ஆறு அல்லது குளத்தில்) நீரில் நின்று கொண்டே இரு உள்ளங்கைகள் இணைந்த நிலையில், பொருத்தமான மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு அந்த பிரம்மா முதல் புல்பூண்டு வரை அனைத்து உயிர்களுக்கும் மூன்று முறை நீரை படைத்தல் வேண்டும்.
தேவர்கள் (இறைவன்), பித்ரு (மூதாதையர்) மற்றும் முனிவர்களுக்கு அனுதினமும் தர்ப்பணம் செய்யவேண்டியது பிரம்மசாரிகளின் கட்டாயமாகும். (விட மனுஸ்மிருதி 2.176).
சில நேரங்களில் நீரோடு எள்ளும் கலக்கப்படும். இத்தகைய தர்ப்பணம், நாம் யாருக்கு கொடுக்கிறோமோ அதனைப் பொருத்து, இறைவனைத் திருப்திப்படுத்துவதாகவும், மூதாதையர்கள் மற்றும் முனிவர்களை வழியனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆறு அல்லது ஏரி கரையில், சூரிய உதயத்திற்கு பின்னர் தர்ப்பணம் செய்தல் வேண்டும். ஒரு ஆலயத்தின் உள்ளே அல்லது ஆலய மண்டபத்தில் தர்ப்பணம் செய்வதை சாஸ்திரம் அனுமதிக்கவில்லை. ஆலயம் என்பது இறை வழிப்பாட்டிற்கும் சுப காரியங்கள் செய்வதற்கான இடம் மட்டுமே. மீறி இறப்பு சார்ந்த அசுப காரியங்களை மேற்கொண்டால் அது கோயிலுக்கும் சமுதாயத்திற்கும் அமங்கலமாகும்..
பித்ரு தர்ப்பணத்தை யார் செய்யலாம்? ஒரு மகன், மூன்று தலைமுறை முன்னோர்கள் வரை தனது தந்தை மற்றும் தாய் வழி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்ய கடமைப்பட்டுள்ளார். மகளுக்கு தர்ப்பணம் செய்ய அத்தகைய கடமை இல்லை. எவருடைய தந்தை இன்னும் உயிரோடு இருக்கிறாரோ, அவர் தனது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்ய முடியாது.
ஒரு சாதாரண பித்ரு தர்ப்பணம் செய்ய 20 நிமிட நேரமாகும். குருக்களும் தர்ப்பணம் செய்பவர் மட்டுமே சடங்கில் கலந்து கொள்ள வேண்டும். பார்வையாளர்களும் குடும்ப உறுப்பினர்களும் சடங்கில் கலந்து கொள்ள அவசியமில்லை.
ஒரு சாதாரண தர்ப்பணத்திற்கு நீரும் கருப்பு எள்ளும் போதுமானது. தர்ப்பணத்திற்கு பிறகு யாரேனும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கலாம். இது ஒரு விருப்பம் மட்டுமே மற்றும் இது மலேசிய சூழலில் பொருத்தமானதல்ல. குருக்களுக்கு கட்டணமாக பணம் வழங்கப்படுவதால் அவர்களுக்கு உடைகள், பழங்கள் அல்லது காய்கறிகள் கொடுப்பது இன்றைய சூழலில் பொருத்தமானது அல்ல. இதன்வழி உணவு அல்லது உணவு பொருட்களின் விரையத்தைத் தவிர்க்கலாம்.
அனைத்து தர்ப்பணங்களுக்கும் அன்னதானம் மற்றும் பிண்டம் தேவையில்லை. தனது மூதாதையர்களுக்கு வழக்கமான அம்மாவாசை தர்ப்பணம் மற்றும் வருடாந்திர சிரத்தம் செய்வோர் மஹாலயா தர்ப்பணத்தின் போது பிண்டம் வைக்க தேவையில்லை.
சமீப காலமாக மலேசியாவில் இந்த மஹாலயா தர்ப்பணம் அதிக அளவில் வணிகமாக்கப்பட்டுள்ளது. சரியான ஆலோசனை பெறாத பொதுமக்களும் சில ஆலயங்களும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள வழிக்காட்டியினைப் பின்பற்றாதது வருந்தத்தக்கது. சில ஆலயங்கள், மூலஸ்தானத்திற்கு அருகிலும் மகா மண்டபத்திலும் தர்ப்பண சடங்கினை நடத்தி ஆலயத்தின் தெய்வீகத் தன்மைக்கு களங்கம் விளைவிக்கின்றனர். பக்தர்களிடம் அதிகப்படியான கட்டணங்களும் விதிக்கப்படுகின்றன.
மலேசிய இந்து சங்கம் தரும் பித்ரு தர்ப்பண சடங்கிற்கான வழிகாட்டலை மலேசிய இந்துக்கள் பின்பற்றி மூதாதையரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்வது சிறப்பு.