புதிய படிப்பினைத் தந்துள்ள தமிழ் புத்தாண்டு; உணர்ந்து கொண்டாடுவோம் – மலேசிய இந்து சங்கம்

எதிர்வரும் 14.04.2020ஆம் தேதி கொண்டாடவிருக்கும் சார்வரி தமிழ் புத்தாண்டு நமக்கு புதிய படிப்பினையைத் தரவே பிறந்துள்ளது. அதனை உணர்ந்து இனி வரும் காலங்களில் நம்மை செம்மைப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளின் முதல் கட்டமாக குடும்பத்தோடு இணைந்து இந்த சார்வரி புத்தாண்டைக் கொண்டாடுவோம் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

பிறக்கும் சார்வரி புத்தாண்டு 13.04.2020ஆம் தேதி இரவு 9.50 மணிக்கு பிறகு அதாவது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பிறப்பதால், மறுநாள் 14.04.2020ஆம் தேதியே புத்தாண்டாக கொண்டாடப்படும். அன்றைய தினத்தில் காலை 8.00 மணி முதல் 9.30 மணிக்குள் குடும்பத்தோடு ஒன்றாக இறைவனை வழிப்பாடு செய்து புத்தாண்டை கொண்டாடுவது சிறப்பாகும்.

தற்போது நாடு மட்டுமல்ல உலகளவிலும் மக்களின் வாழ்வியலை மாற்றியமைக்கும் வகையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கோவிட்-19 நோய் தொற்றினால் பலர் கவலையடைந்திருந்தாலும் தீமையிலும் ஒரு நன்மை உண்டு என்பது போல, இந்த சூழ்நிலையில் பலருக்கும் குடும்பம், ஆரோக்கியம், சிக்கன வாழ்க்கை முறை ஆகியவற்றின் புரிதல் ஏற்பட்டிருக்கிறது என்பது முற்றிலும் உண்மை. இதன் அடிப்படையில், நமக்கு நாம் வாழும் வாழ்க்கையின் உண்மை தத்துவத்தை உணர்த்தும் புத்தாண்டாகவே இவ்வருட தமிழ் புத்தாண்டு அமைந்துள்ளது. முந்தைய ஆண்டுக்களில் புத்தாண்டைக் குடும்பத்தோடு கொண்டாட விடுமுறை இல்லை என பலர் வருந்திருக்கலாம். ஆனால் இம்முறை நடமாட்ட கட்டுப்பாடு ஆணை காரணமாக வீட்டிலேயே இருப்பதால் குடும்பதோடு முழு இறை சிந்தனையோடு இந்த தமிழ் புத்தாண்டை கொண்டாடி மகிழ்வோம்.

கடந்த காலங்களில் புத்தாண்டு அன்று ஆலயங்களுக்கு சென்று வழிப்படுவதும் மருந்து நீர் பெற்று கொள்வதும் வழக்கமானதாக இருந்தாலும் இம்முறை நடமாட்ட கட்டுப்பாடு ஆணை இன்னும் நடைமுறையில் இருப்பதால் ஆலயங்கள் பொதுமக்களுக்கு திறக்கப்படாது. எனவே, மருந்து நீரை வீட்டிலேயே தயாரிக்கும் முறை குறித்து மலேசிய இந்து சங்கம் அகப்பக்கத்திலும் முகநூலிலும் பிற சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளது. அதனைப் பின்பற்றி இந்துக்கள் மருந்து நீர் தயார் செய்து குளித்து உடலோடு மனதையும் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தின் ஆணை ஒட்டி, ஆலயங்கள் பொதுமக்களின் வழிப்பாட்டுக்கு திறக்கப்பட கூடாது. ஆனால் உலக நலன் வேண்டியும், நாடு விரைவில் நோய் தொற்று பாதிப்பிலிருந்து விடுப்படவும் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளோ அல்லது யாகங்களோ மேற்கொள்ளலாம். ஆனால், இதனை ஆலய குருக்கள் மட்டுமே செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. அரசாங்கத்தின் ஆணையை மீறி ஆலயங்கள் திறக்கப்பட்டால் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

சார்வரி புத்தாண்டை கொண்டாடும் அதேவேளையில், இரவு பகல் பாராமல் இன மத பேதமின்றி மக்களுக்காக பணியாற்றி கொண்டிருக்கும் நடமாடும் தெய்வங்களான மருத்துவர்கள், தாதியர், சுகாதார பிரிவினர், போலீஸ், இராணுவ துறையினர், பொது இயக்கங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, அரசாங்கத்தின் விதிகளை முறையாக கடைப்பிடித்து கோவிட் 19-ஆல் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து குணமடையவும் நாடு சுபீட்சம் பெறவும் மத நல்லிணக்கம் மேம்படவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம். அனைவருக்கும் மலேசிய இந்து சங்கத்தின் சார்வரி தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

You may also like...