நாடாளுமன்றத்தில் தோலின் நிறம் குறித்து ஏளனமா?

14 ஜூலை 2020,

நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது பத்துகவான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டுவை நோக்கி தோல் நிறம் குறித்து ஏளனமாக பேசிய பாலிங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹீம் நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

மக்களைப் பிரதிநிதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்ட இனத்தை இழிவுப்படுத்தும் வகையில் ‘கருப்பர்’ என்பதை குறிக்கும் வகையிலான வார்த்தையைப் பயன்படுத்தியது முறையற்ற செயலாகும். அவர் யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை என்றாலும் ஓர் இந்தியர் பேசும்போது இடைமறித்து அவரை ஏளனம் செய்யும் வகையில் அவ்வாறு பேசி இருப்பது ஒட்டு மொத்த இந்தியர்களின் மனதைப் புண்படுத்தும் செயல் என்பதை யாரும் மறுக்க முடியாது.

நாட்டின் உயரிய, மதிக்கத்தக்க இடமாக கருதப்படுவது நாடாளுமன்ற அவை. ஆனால், அவ்விடத்தில் பல்லின மக்களை வேற்றுமைகள் பாராது பிரதிநிதிக்க வேண்டிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் இனத்துவேச பேச்சு கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல நடவடிக்கைக்கு உட்பட்டதாகும். டத்தோஶ்ரீ அஸிஸ் இந்தியர்களை அவமானப்படுத்துவதும் இனங்களிடையே இனவாத போக்கிற்கு தூண்டுதலாய் இருப்பதும் தண்டிக்கப்பட வேண்டிய விசயமாகும்.

எனவே, நாட்டில் உள்ள ஒட்டு மொத்த இந்தியர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டத்தோஶ்ரீ அப்துல் அஸிஸ் இந்தியர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் தெரிவித்தார்.

என்றும் இறைச் சேவையில்,

ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் PMW.,JMW.,AMK.,BKM.,PJK

தேசியத் தலைவர்,மலேசிய இந்து சங்கம்

You may also like...

2 Responses

  1. Nandhakumar Armugam says:

    How to register temple in HSM

    • Ranee Narendranath says:

      Please contact our State Council where the temple is located to get the Registration Form.