நவராத்திரி விழா: 8 நாட்கள்!
28.09.2021-
இந்துக்கள் அடுத்த மாதம் நவராத்திரி விழாவைக் கொண்டாடவிருக்கும் நிலையில், இவ்வருடம் ஒரே நாளில் இரு திதிகள் வருவதால் நவராத்திரி விழா மொத்தம் எட்டு நாட்கள் மட்டுமே கொண்டாடப்படும் என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.
இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான நவராத்திரி விழா அடுத்த மாதம், அக்டோபர் 07ஆம் தேதி முதல் கொண்டாடப்படவிருக்கிறது. நவராத்திரி விழா பொதுவாக ஒன்பது நாட்கள் மற்றும் விஜயதசமி சேர்த்து 10 நாட்கள் என கொண்டாடப்படும். நவராத்திரி விழா பிரதமை திதியில் தொடங்கி 10வது நாளான விஜயதசமி தசமி திதியில் நிறைவடையும்.
ஆனால், இவ்வருடம் நவராத்திரியில் இரு திதிகள் ஒரே நாளில் வருவதால், மொத்தம் 8 நாட்கள் மற்றும் விஜயதசமி சேர்த்து 9 நாட்கள் மட்டுமே நவராத்திரி கொண்டாடப்படும்.
எனவே, நவராத்திரி விழாவின் போது அக்டோபர் 7 & 8ஆம் தேதி ஆகிய இருநாட்கள் துர்கா தேவிக்கும் அக்டோபர் 9, 10 & 11ஆம் தேதி ஆகிய மூன்று நாட்கள் லெட்சுமி தேவிக்கும் அக்டோபர் 12, 13 & 14ஆம் தேதி ஆகிய மூன்று நாட்கள் சரஸ்வதி தேதிக்கும் வழிபாடு செய்ய வேண்டும். அக்டோபர் 15ஆம் தேதி விஜயதசமி கொண்டாட வேண்டும்.
அதேவேளையில், நவராத்திரி விழா கொண்டாடுவதற்கு புதிய செயல்பாட்டு தர விதிமுறைகள் (எஸ்.ஓ.பி) இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே, இதற்கு முந்தைய எஸ்.ஓ.பி-யை ஆலயங்கள் பின்பற்ற வேண்டும். விழாவை மிதமான அளவில் மட்டுமே கொண்டாட முடியும். பக்தர்கள் ஒரே நேரத்தில் 50 பேர் மட்டுமே ஆலயத்தில் இருக்க அனுமதி உண்டு. ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் கட்டாயம் இரு தடுப்பூசியையும் செலுத்தி கொண்டு 14 நாட்கள் ஆகியிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஊர்வலங்கள் அல்லது திருவிழா நடத்த அனுமதி இல்லை. மேலும், அரசாங்கம் அறிவித்த அனைத்து எஸ்.ஓ.பி-க்களையும் பக்தர்களும் ஆலய நிர்வாகத்தினரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
மலேசிய இந்து சங்கம் நவராத்திரி விழாவிற்கென்று பிரத்தியேக எஸ்.ஓ.பி கோரி ஒற்றுமைத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. புதிய எஸ்.ஓ.பி ஏதேனும் அறிவிக்கப்பட்டால் மலேசிய இந்து சங்கம் அறிக்கை வழி தெரியப்படுத்தும் என தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி. திருச்சிற்றம்பலம்.