25.12.2020-
நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக மைசென்சஸ் எனும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2020-இல் பதிந்து கொள்ளுமாறு மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது. இதுவரை, ஏறக்குறைய 400,000 இந்தியர்கள் மட்டுமே இ-சென்சஸ்ஸில் பதிந்துள்ளனர் எனும் தகவல் வருத்தம் அளிக்கிறது.
மின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள சில விவகாரங்கள் தொடர்பில் விளக்கம் பெற மலேசிய இந்து சங்கம் மலேசிய புள்ளிவிவர இலாகாவுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியது. இதில் புள்ளிவிவர இலாகாவின் தலைமை இயக்குனர் கனகேஸ்வரி இராமசாமி, மின் கணக்கெடுப்பு தொடர்பாக இந்திய சமுதாயம் கொண்டுள்ள ஐயங்கள் தொடர்பாக விளக்கம் அளித்தார். இலாகாவினால் வெளியிடப்படும் இறுதி பட்டியலானது, மொத்த இந்தியர்களை மட்டுமே குறிக்கும். மாறாக, இந்தியர்கள் தமிழர், தெலுங்கர், மலையாளி என பிரிக்கப்பட மாட்டார்கள். புள்ளிவிவர இலாகா உயர் ஒருமைப்பாட்டுடன் பணியாற்றி வருவதால் பொதுமக்கள் தங்கள் விவரங்களை வழங்க தயக்கம் காட்ட வேண்டாம் என அவர் கூறினார்.
இந்திய சமூகத்தின் விவரங்களை திரட்ட பல்வேறு வழிமுறைகளை இலாகா மேற்கொண்டாலும், மக்களின் பங்களிப்பு மிக மிக குறைவாக இருக்கிறது. இதுவரை, 4 லட்சம் இந்தியர்கள் மட்டுமே மக்கள் கணக்கெடுப்பில் பங்கெடுத்து தங்கள் விவரங்களை வழங்கியுள்ளனர். இதற்கு முன்னர் நாட்டில் 2 மில்லியன் இந்தியர்கள் இருப்பதாக தரவு உள்ள நிலையில், தற்போதைய தரவு கவலை அளிப்பதாக உள்ளது.
தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள் மற்றும் அரசு சாரா இயக்கங்கள் ஆகியவை இயங்கலை படிவங்களை பூர்த்திச் செய்து சமூகத்திற்கு உதவ முன்வந்த போதிலும் இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் கடமையைச் செய்யவில்லை.
“நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் நாம் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதைப் போலவே, இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் நாம் பங்கேற்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கெடுப்பதம் மூலமாக மட்டுமே நாட்டில் நம்மை பற்றிய தரவுகள் இருக்கும். நாம் கணக்கிடப்படுவதை உறுதி செய்வது நமது கடமை” என மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் கூறினார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் எடுக்கப்படும். அடுத்த கணக்கெடுப்பு 2030ஆம் ஆண்டு தான் நடைபெறும். அதுவரை இப்போது நாம் வழங்கும் தரவுகளே அதிகாரப்பூர்வ மக்கள் தொகையாக கொள்ளப்படும்.
எனவே, உடனடியாக மின் கணக்கெடுப்பு பத்திரங்களைப் பூர்த்தி அனுப்புமாறு, மலேசிய இந்து சங்கம், அனைத்து இந்தியர்களை குறிப்பாக இந்து சங்க உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறது. மேலும் பாரங்களைப் பூர்த்திச் செய்து பொதுமக்களுக்கு உதவ மாநில மற்றும் வட்டாரப் பேரவைகள் மூலமாக உதவிகள் வழங்கப்படும்.
“இது செயல்பட வேண்டிய நேரம். நம் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வேற்றுமைகளுக்கு முக்கியத்துவம் தராமல் ஒரே குரலாக செயல்படுவோம். நமது கடமை செய்ய, உரிமை பெற தயக்கம் காட்டக் கூடாது. அனைவரும் மின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும்” என மலேசிய இந்து சங்க தேசியக் கௌ. துணை பொதுச் செயலாளர் திருமதி த கௌரி தெரிவித்தார்.